பொது மக்கள் பலரின் உயிரைக் காவு கொள்வதற்கு காரணமான தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது எந்த கருணையும் காட்ட மாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
பலருடைய உயிர்களைக் கைப்பற்றக் காரணமாக இருந்த வெடிப்புச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்து சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்புப் பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாசகார செயற்பாடுகள் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குழைக்கும் பாரிய திட்டமிட்ட நடவடிக்கைகளாகும் என நான் கருதுகின்றேன். இந்தத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சட்டத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பதற்ற நிலைமையில் பொறுமையாக இருந்து சமாதானத்தைப் பாதுகாக்க முயற்சிப்போம் என்றார்.