இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக மேற்கொண்ட விசாரணை விபரங்களை அந்த அமைப்பு கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது மனித குலத்திற்கு எதிராக நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு வெளியிட்டு வருகின்றதுடன், படையினரும் இதனை மறுத்துள்ளனர். எனினும், ஒரு சில படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தற்போது கூறிவருகின்றது.
இந்நிலையில், குற்றம் செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எனினும், யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு கோரி வருகின்ற நிலையில், அரசாங்கம் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளதுடன், உள்நாட்டு விசாரணை பொறிமுறையை பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையிலேயே, புலம்பெயர் அமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன