தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை. எமது உரிமைகளுக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில் ஆரம்பமானபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதையும் மீறி அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம்.
தமிழ் மக்கள் இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழத் தயாரில்லை. தமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து இராணுவத்தினர் உடன் வெளியேற வேண்டும். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
நாம் கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உட்பட்டாலும் அதிலிருந்து மீண்டெழுந்துள்ளோம். எமது உரிமைகளுக்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
உரிமைகள் கிட்டும் வரை எத்தனை இடர்கள் வரினும் எமது போராட்டம் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.