ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை.
ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது.
மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இந்தியா - பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன - பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர்.
மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது.
ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம் உலகுக்கு அறையும் பயங்கரவாதப் போர் முரசாக மட்டும் இந்தத் தாக்குதல்களை நாம் பார்த்துவிட முடியாது. இதன் பின்னால் இருக்கக் கூடிய கேந்திர, புவிசார் அரசியல் சூட்சுமங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இஸ்லாமிய அல்லது இஸ்லாமியவாதம் மீதான எதிர்ப்பு உணர்வுக்கு ஆட்பட்ட மன நிலையில் இருந்தாவாறு இதை நாம் அணுகுவது அறிவு பூர்வமான அணுகுமுறை ஆகாது.
சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம்.
சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம்
எது எவ்வாறிருப்பினும், தாக்குதல் திட்டமிடலும் வழிநடத்தலும் இலங்கைத்தீவுக்கு வெளியே இருக்கும் ஒரு தரப்பால் மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
அண்மைக்காலத்தில் இந்து - பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது.
அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது.
எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம்.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்தே தாக்குதலை நடத்திய வெளிச்சக்திகள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
மதரீதியான தாக்குதலாக வெளிப்படும் இத்தாக்குதல் எதேச்சையான உணர்வு வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகப் புலப்படவில்லை.
திட்டமிடல், வழி நடத்தல் மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் இராணுவத் தேர்ச்சியுள்ள ஒரு தரப்பே இதை நடாத்திமுடித்திருக்கிறது என்பது வெடிப்புகள் நடந்த இடங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் தெரிவுகளையும், அவற்றின் தாக்கத்தையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது.
பௌத்த சிங்கள மக்கள் மீதோ பௌத்த விகாரைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது முஸ்லிம்களை நோக்கிய எதிர்த்தாக்குதலுக்கு வழிசமைத்திருக்கும்.
இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் எவ்வாறு இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புக்களுக்கும் சம பங்கு இருப்பதாக அமெரிக்க, இந்திய அணி வாதிடுகிறதோ, அதைப் போலவே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தரப்பும் இலங்கையின் தமிழர் சிங்களவர் ஆகிய இரு தரப்புகளையும் பலிக்கடாவாக்குவதில் சம தரப்பாகப் பார்த்திருப்பது ஒரு புதிய அம்சம்.
மேற்கில் கொழும்பும் கிழக்கில் மட்டக்களப்பும் இலக்குகளாகத் தெரிவாகியுள்ளன.
சிங்கள, தமிழ் கிறிஸ்தவ மக்களும் வெளிநாட்டவர்களும் குண்டுத் தாக்குதலில் இறந்திருக்கின்றார்கள், காயமடைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களும் வெளிநாட்டவர் தங்கும் நட்சத்திர ஹோட்டேல்களும் மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பும் தாக்குதலுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது.
அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம்
நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டே தாக்குதல் உரிய நேரத்தில் நடத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது வெளிச் சக்திகளின் வேலையாக இருந்தாலும் உள்ளுர் ஆதரவுத் தளம் அல்லது தளங்கள் இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
இலங்கை ஏனைய அயல் நாடுகளோடு நிலத்தொடர்பு உடையதல்ல. இது ஒரு தீவு.
முதன் முறையாக வெளிச்சக்திகளின் இஸ்லாமியவாத பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிலத் தொடர்பில்லாத தீவொன்றில் நடத்தப்பட்டிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்தான் உண்மையான பயங்கரவாதம் இலங்கைக்கு வந்துள்ளது என்பதையும் அமெரிக்காவுக்கு இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது.
1997 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்திருந்தது. அது ஒரு புவி சார் அரசியல் தேவையை ஒட்டி எடுக்கப்பட்ட முடிவென்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
புலிகளின் வளர்ச்சியை மழுங்கடிக்கவும் அதேவேளை இலங்கை அரசைத் தம் வழிக்குக் கொண்டுவரும் தேவையை முன்னிட்டும் இந்தத் தடை கொன்டுவரப்பட்டிருந்தது.
தற்போது, இலங்கை இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களைச் சில நாடுகளில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவோம் என்ற அழுத்ததைத் தோற்றுவித்து இலங்கை அரசைச் சீனாவின் பக்கம் செல்லவிடாது தடுக்கும் ஒரு உத்தியை மேற்குலக நாடுகள் வகுத்திருப்பது ஜெனீவா அறிக்கைகள் ஊடாகப் புலனாகிறது.
அதேவேளை சிங்கள மக்களிடம் மேற்குலம் மீதான அதீத எதிர்ப்பு வராத வகையில், வன்னியில் இருந்து ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, வட அமெரிக்க நாடுகளுக்குச் சென்று புகலிடம் கோரியுள்ள முன்னாள் போராளிகளை, குறிப்பாகத் தளபதிகளை, போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்ற அணுகுமுறையும் ஜெனீவா நகர்வுகளின் பின்னணியில் வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
முன்னாள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இலங்கை அரசுடன் ஒத்துழைத்து அபிவிருத்தி புனர்வாழ்வு வேலைகளில் இணைந்து செயற்படுமாறு மேற்கு நாடுகள் தமது திட்டங்களை வகுப்பதும் இதன் அடிப்படையிலேயே.
மேற்கு நாடுகளின் கைகளில் இந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிக்கிக் கொள்ளும்போது அந்த நாடுகள் இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான பகடைக்காய்காளாக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.
மறுபுறம், ஈழப் போரின் போது இடம்பெற்றது தமிழ் இன அழிப்பா என்பதற்கான சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் கூட 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தை முழுமையாகத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் இவ்வாறான அணுகுமுறைகளில் மேற்குலகம் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மறுபுறம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது உறவின் மூலம் இலங்கையை எப்படித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் அல்லது அமெரிக்கா இலங்கையில் நிலைகொள்வதை எவ்வாறு குழப்பலாம் என்ற உத்திகளைக் கையாளும் என்பதும் வெள்ளிடை மலை.
மத சார்பான பிளவுகளை தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும்
இன அழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றம் போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் பொறுப்புக் கூறல் இன்றித் தப்பித்துவிடலாம் என்பது இலங்கை இராணுவத்துக்கு மாத்திரமல்ல பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் வெளிச்சக்திகளுக்கு உதவி, ஒத்தாசை புரியும் தரப்புகளுக்கும் சாதகமான நிலையாகிவிடுகிறது.
இதையெல்லாம் மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டாலும், அவைகளுக்கு தத்தம் கேந்திர நலன்களே பிரதானமாகப்படுகிறது.
ஆகவே ஈழத்தமிழர்கள் தமது நலன் குறித்த அரசியலைத் தாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இலங்கை ஒற்றையாட்சி அரசு வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தான் தனது பெரும்பாலான இராணுவ முகாம்களை அமைத்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவீதமான இராணுவத்தை வடக்கு கிழக்கில்தான் இலங்கை அரசாங்கம் வைத்திருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் உள்நாட்டுப் போர் ஒன்றைத் தடுத்தல் என்ற மன நிலையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து இராணுவ முகாம் அமைத்தல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற முழுக் கவனத்தையும் இலங்கை இராணுவம் செலுத்துகின்றது.
இத் தருணத்தில் தான், இலங்கை இராணுவத்தோடு ஒருபுறம் உறவு வைத்துக்கொண்டு மறுபுறம் வேறு குழுக்களை இலங்கைத் தீவுக்குள் பாகிஸ்தானில் இருந்து ஏவி விடும் நடவடிக்கைகளும் நடகின்றனவா என்ற ஐயம் வலுப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விசுவாசமாகச் செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பித்து வருகின்றது. அதேவேளை சீனாவோடு அரசியல், பொருளாதார கலாச்சார உறவுகளும் பேணப்படுகின்றன.
இந்த இருதலைக் கொள்ளி நிலை பாகிஸ்தானுக்கும், அது அணிவகித்திருக்கும் சீனத்தலைமைக்கும் கசப்பானதொரு விவகாரம் என்பது வெளிப்படை.
சுருங்கக் கூறின், 2009 இன அழிப்புப் போருக்குப் பின்னர், தென்னிலங்கை ஒரு பெரிய பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது எனலாம்.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மைத்திரி – மஹிந்த முரண்பாடுகள், கோட்டாபய, பசில் ராஜபக்ச மற்றும் பிரதான அரசியல் கட்சிகளிடையேயான உள்ளக முரண்பாடுகள் என இலங்கை அரசியலில் தற்போது தலைவிரித்தாடும் குழப்பமான சூழலை சீன-பாகிஸ்தான் அணி ஒரு புறமும், அமெரிக்க-இந்திய அணி மறு புறமுமாகப் பயன்படுத்த விழையும்.
சீன-பாகிஸ்தானிய அணுகுறை இவ்வாறிருக்குமென்றால் மறுபுறம் இந்திய அணுகுமுறை, குறிப்பாக வடக்கு கிழக்கில், எவ்வாறு அண்மையில் இருந்திருக்கிறது என்பதையும் நாம் நோக்கவேண்டும்.
மத சார்பான பிளவுகளை ஈழத்தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும்.
வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்
தென்னகத் தமிழர்களை உய்ய விடக்கூடாதென்றும், அவர்களைச் சாதி மதம் என்ற அடிப்படைகளில் கூறுபோட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் வட இந்திய புலனாய்வு அணுகுமுறையும், இந்துத்துவ வாதமும் எண்ணுகின்றன.
தமிழகத்தை எவ்வாறு கூறு போடுவதில் வட இந்தியா மும்முரம் காட்டுகிறதோ அதே மும்முரத்தையே ஈழத்தமிழர் விடயத்திலும் அது செய்கிறது.
2009 இற்குப் பின்னர் இந்த அணுகுமுறை வடக்கிலும் கிழக்கிலும் சில பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு, அண்மையில் சில வெற்றிகளையும் காண ஆரம்பித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை.
இந்தியாவின் இந்த அணுகுமுறையை பாகிஸ்தானின் புலனாய்வும் பார்த்துக் கொண்டு வாளா இருக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.
ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல் இந்தப் படிப்பினையைத்தான் விட்டுச் சென்றுள்ளது