இலங்கை தொடர் குண்டுவெடிப்பு? சீமான் பரபரப்பு அறிக்கை. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 21, 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு? சீமான் பரபரப்பு அறிக்கை.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கொழும்புவில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தை தருகிறது.

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் வெளியாகியிருக்கிற செய்திகள் பெரும் கவலையை தருகின்றன.

ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற மக்கள் மீது திட்டமிட்டு இக்கோரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

2 லட்சம் தமிழர்கள் சிங்கள பேரின வாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி, நீதிகேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், இத்தாக்குதலானது பெரும் ஐயத்தை தோற்றுவிக்கிறது.

அண்மைக்காலமாக மசூதிகள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில் இந்த தாக்குதல் பெரும் சந்தேகத்தை கிளப்புகிறது.

இந்திய உளவு அமைப்பு இலங்கை அரசுக்கு 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்ட பிறகும் இலங்கை அரசு மெத்தனமாக இருந்ததன் மர்மம் என்ன?


இலங்கையில் தேர்தல் நெருங்குகிற வேளையில், அதுவும் தமிழர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிற தாக்குதல் சிங்கள அரசு மீதே ஐயத்தை தோற்றுவிக்கிறது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்துச் சிங்கள மக்களிடையே அரசியல் செய்திட்ட சிங்களப் பேரினவாத அரசு இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு என்ன காரணம் கற்பிக்கப் போகிறது?

தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை ஆதரித்த உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு என்ன பதில் தரப்போகிறது?. போர்க்கருவிகள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் தந்து பௌத்த சிங்கள அரசு தமிழர்களை கொன்றழித்த போது துணை நின்ற இந்திய அரசு, மத ரீதியிலான தாக்குதலுக்கு என்ன செய்யப்போகிறது?


2009யில் நடைபெற்ற சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்குப் பிறகு மிகவும் பாதிப்பிலிருந்த ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை இத்தாக்குதல் மேலும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த சதிச் செயலுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் எவராயினும் அவர்களை தண்டிக்க வேண்டும்.

முதற்கட்ட விசாரணையே இன்னும் தொடங்கப்படாத நிலையில் தாக்குதலுக்கு, இஸ்லாமியர்கள் மீது பழிபோடும் வடஇந்திய ஊடகங்களின் செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. இது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கச் செய்யும் மடைமாற்றச் செயலாகும்.

ஆகவே, சரியான விசாரணையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும், தகுந்த மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியிருக்கிறார்.