நாட்டின் பாதுகாப்பு அரசியலிலும் பார்க்க உயர்வான மட்டத்தில் இருக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தற்போதைய சூழ்நிலையில் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஒன்றிணைந்து செய்றபடவேண்டும் என்றும் பாதுகாப்பு தொடர்பில் பொது கொள்கை ஒன்று வகுப்பதற்கு செயற்படவேண்டும் என்றும் கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றம் விளைவித்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் செயற்படவேண்டும் என்றும் அதிமேற்றிராணியார் பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளருடனான சந்திப்பில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது மே மாதம் 5 ஆம் திகதி அனைத்து தேவாலயங்களிலும் தேவ ஆராதனை வழமைப் போன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவாலயங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் தேவாலத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். பை முதலானவை எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு தினங்களில் தேவாலங்களில் ஆறு தேவாராதணைகள் மாத்திரம் நடைபெறும். தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இந்த தேவாராதணை ஒன்று அல்லது இரண்டுக்கு வரையறுக்குமாறு வணக்கத்திற்குரிய பிதாக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்