யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நிலக்கீழ் தளவீடு – கைது செய்யப்பட்டவருக்கு பிணை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நிலக்கீழ் தளவீடு – கைது செய்யப்பட்டவருக்கு பிணை



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டமையை அடுத்துக் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேகநபர் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

இந்த விசாரணையின்போது “அந்த வீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் தளம் பழமையானது. 30 வருடங்களுக்கு மேற்பட்டது. அந்த நிலக்கீழ் தளத்துக்குள் இருந்த எந்தவிதமான பொருள்களும் மீட்கப்படவில்லை.

தற்போது குடியிருப்பவரான சந்தேகநபருக்கு அந்த நிலக்கீழ் தளம் பற்றி எதுவுமே தெரியாது. அதனால் அவரைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வி.கௌதமன் மன்றுரைத்தார்.

பொலிஸாரின் விண்ணப்பம் மற்றும் சந்தேகநபர் சார்பான சமர்ப்பணத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணி முதல் பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இந்தத் தேடுதலின்போது பச்சைப்பள்ளிக்கு அண்மையாகவுள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் அமைக்கப்படிருந்த நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டது. பதுங்குழி போன்ற இந்த நிலக்கீழ் தளம் சீமெந்தால் கட்டப்பட்டப்பட்டிருந்த்து. அதனைக் கண்டறியாதவாறும் சிமெந்திலான கொன்கிரீட் போடப்பட்டிருந்தது.

இந்த நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டதையடுத்து அங்கு குடியிருந்த புடவைக் கடைப் பணியாளர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.