தெமட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றொரு தற்கொலைக் குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முடிவு செய்ய மரபணுச் சோதனை நடத்தப்படவுள்ளது.
கடந்த 21ஆம் நாள், விடுதிகள், தேவாலயங்களில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையாரான வர்த்தகர் இப்ராகிமுக்கு சொந்தமான தெமட்டகொட வீடு முற்றுகையிடப்பட்டது.
அன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், அங்கு இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
சிறப்பு அதிரடிப்படையினர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், வீட்டுக்குள் நுழைந்த போது, ஷங்ரிலா குண்டுவெடிப்பை நிகழ்த்திய இல்ஹாம் இப்ராகிமின் மனைவியான, மேல் மாடிக்கு ஓடிச் சென்று குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார்.
கர்ப்பிணியாக இருந்த அவரும், அவரது 3 குழந்தைகளும், 3 காவல்துறையினரும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் முதல் மாடியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தக் குண்டுவெடிப்பை அடுத்து, சிதறிப்போன மனித உடல் பாகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அது, ஒரு ஆண் தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மரபணுச் சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக் குண்டுதாரிகளில் பலரையும் மரபணுச் சோதனை மூலம் அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிலர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.