காட்பாடியில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது சாக்கு மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் கட்டுக்கட்டாக சிக்கிய பணம். காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மூட்டை, மூட்டையாக பணம் சிக்கியது. ஏராளமான பணம் சிக்கியதால், எந்திரங்கள் கொண்டுவந்து ரூபாய் நோட்டுகளை எண்ணினார்கள்.
தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது.
இவருடைய மகன் கதிர்ஆனந்த் காட்பாடியில் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார். கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு வருமானவரித்துறை அதிகாரிகள், துரைமுருகன் வீடு, அவரது மகன் நடத்தும் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்தில் சோதனை நடத்தினார்கள்.
விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் ரூ.10 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
இதேபோல் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் குடியாத்தம் அணங்காநல்லூரைச் சேர்ந்த கே.சக்கரவர்த்தி, வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், வருமானவரி அதிகாரிகள் நேற்று மீண்டும் துரைமுருகன் வீடு, அவருடைய மகன் கதிர்ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
சோதனையின்போது பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சோதனை நடந்த அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணைராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
வேலூர் நகர தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவருடைய சகோதரி விஜயா ஆகியோரின் வீடு காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பத்தில் உள்ளது. அங்கும் மற்றும் பூஞ்சோலை சீனிவாசனின் குடோன், வஞ்சூர் ஊராட்சி தி.மு.க. துணைச் செயலாளர் பெருமாள், செங்குட்டை கல்புதூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அஸ்கர் அலி ஆகியோரின் வீடுகளிலும் நேற்று காலை 6 மணி முதல் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வருமானவரித்துறை துணை ஆணையர் ஜெயராகவன், உதவி ஆணையர் விஜய்தீபன் ஆகியோர் தலைமையில் வந்த 40 அதிகாரிகள் தனித்தனியாக பிரிந்து சென்று சோதனை நடத்தினார்கள். அவர்கள் சென்னையில் இருந்து 10 கார்களிலும், காஞ்சீபுரத்தில் இருந்து 8 கார்களிலும் வந்திருந்தனர்.
பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி விஜயாவின் வீட்டுக்கு சோதனை நடத்தச் சென்ற வருமான வரி அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர் உஜ்வல்குமாரும் சென்றிருந்தார்.
சோதனை நடந்த போது அந்த வீடுகளில் இருந்தவர்கள் யாரும் வெளியே செல்லவோ, வெளியே இருந்து யாரும் வீட்டுக்குள் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
துரைமுருகன் வீடு, கதிர்ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களுக்கு பகல் 12 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது பள்ளிக்குப்பத்தில் உள்ள விஜயாவின் வீட்டில் சாக்கு மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் புத்தம் புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண கட்டுகளில் வார்டு எண், வாக்குச்சாவடி, பகுதியின் பெயர் ஆகியவை எழுதப்பட்டு இருந்தன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது.
சோதனையின் போது, விஜயாவின் வீட்டில் அதிக அளவில் பணம் சிக்கியதால் அங்கு கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
அந்த பணத்தை எண்ணுவதற்காக, பணம் எண்ணும் 2 மெஷின்களுடன் இந்தியன் வங்கி அதிகாரிகள் இருவர் பகல் 12.10 மணிக்கு விஜயாவின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட பணம் மெஷின்கள் மூலம் எண்ணப்பட்டது. இரவு 7 மணி அளவில் ஒரு மெஷின் பழுதானதால் கூடுதலாக, 3 சிறிய மெஷின்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணப்பட்டது.
பணம் எண்ணும் பணி தொடர்ந்து நீடித்ததால் விஜயா வீட்டின் முன்பு அதிக ஒளிதரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. கோடிக்கணக்கில் சிக்கியதா?
வருமான வரி சோதனையின் போது கோடிக்கணக்கான பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப் படவில்லை.