தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் தாமாகவே முன்வந்து சரணடைவதற்கு 24 அல்லது 48 மணிநேர கால அவகாசம் வழங்கும்படியும் அவ்வாறு சரணடைபவர்களுக்கு புனர்வாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மானின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘தீவிரவாதத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் தாங்கள் தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளமையை உணர்ந்து இந்த சரணடைவதற்கான கால எல்லைக்குள் சரணடைந்தால் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவேண்டும். இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டால் தவறாக வழிநடாத்தப்பட்ட தீவிரவாத இளைஞர்களின் குடும்ப அங்கத்தவர்கள் அவர்களைச் சரணடையுமாறு கட்டாயப்படுத்தலாம்.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளை உடன் அறிவிப்பதற்கும் முஸ்லிம்கள் நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம். கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் முஸ்லிம்களை இது தொடர்பில் விழிப்புணர்வூட்டி வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.