யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 6, 2019

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல்?


யாழ் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவிகள் மீது சிரேஸ்ட மாணவர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அங்கு வருகை தந்த சிரேஸ்ட மாணவர்கள் புதுமுக மாணவர்கள் சிலரை அடித்து துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், சில சிரேஸ்ட மாணவர்கள் புதுமுக மாணவிகள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது.

இதனை மாணவி ஒருவர் காணொளி எடுக்க முற்பட்ட போது அந்த மாணவியை சிரேஸ்ட மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான மாணவி உடனடியாகவே பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இது குறித்து முறைப்பாடு செய்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த துணைவேந்தர் குறித்த வரவேற்பு நிகழ்வை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிரேஸ்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பண்பாட்டிற்கு பேர் போன யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாகவே பகிடிவதை என்ற போர்வையில் பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது