சாய்ந்தமருது தாக்குதல் தொடர்பாக மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே, அந்த ஆயுதக்குழுவை பாதுகாப்பு தரப்பினர் முற்றுகையிட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.
கிடைக்கும் முதற்கட்ட தகவல்களின்படி-
சம்மாந்துறையில் சந்தேகத்திற்கிடமான குடியிருப்பாளர்கள் குறித்து, கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நேற்று காலையில் சோதனைக்காக பொலிசார் சென்றிருந்தனர். எனினும், வீட்டில் யாருமிருக்கவில்லை.
வாடகைக்கு பெறப்பட்ட அந்த வீட்டில் காத்தான்குடியை சேர்ந்தவர்களே தங்கியிருந்தனர்.
இதேவேளை, நேற்று அட்டாளைச்சேனை, நிந்தவூர் பகுதிகளிலும் அவர்களை குறிவைத்து தேடுதல் நடத்தப்பட்டது. இந்த தேடுதல்களில் 2 நிசான் வாகனங்கள் உள்ளிட்ட மூன்று புதிய வாகனங்கள் மீட்கப்பட்டன.
அந்த தேடுதல்களை தொடர்ந்து, சம்மாந்துறை வீட்டிற்கே அந்த குடியிருப்பாளர்கள் திரும்பியுள்ளனர். அந்த புதிய குடியிருப்பாளர்கள் தொடர்பில், பிரதேசமக்களால், அந்த பகுதியில் நின்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரியொருவருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதையடுத்து பொலிஸ் அதிகாரி அந்த வீட்டிற்கு சென்றபோது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனினும், பொலிஸ் அதிகாரி அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். உடனடியாக இராணுவத்தினரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டது.
கடுமையான மோதலின் பின்னர் வீடு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
அங்கு சில உடல்கள் இருப்பதாக தெரிகிறது. எனினும், எண்ணிக்கை குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.
வீட்டிலிருந்து 5000 ரூபா தாள்களின் கட்டுக்கள், ஜிகாத் பிரச்சார புத்தகங்கள், வெடிபொருட்கள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.