பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியின் ஊடாகவே வடக்கு- கிழக்கில் பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், பாதுகாப்புக்காக 300க்கும் மேற்பட்ட பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
யுத்தத்தின்போது பாதுகாப்புக்காக 150 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் பாதுகாப்புக்கான நிதி 2மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியூடாகவே வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது வெறுமனே இராணுவத்தை பலப்படுத்துவதற்காக மட்டும் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பௌத்த மதத்தை வடக்கில் பலப்படுத்துவதற்காகவே இவ்வாறு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தினார்.