காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது குறித்த யோசனை ஒன்றை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் குறித்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் வைத்து சந்திக்க தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து எமது செய்தி பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ பதவி வகிக்கும் போது, அவருக்கும் காவற்துறை மா அதிபருக்கும் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
அதனையடுத்து, பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து ஹெமசிறி பெர்னான்டோ விலகினார்.
இதேவேளை, பிரதமருடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.