நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (25ஆம் திகதி) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 12 மணித்தியாலங்களில் எந்தவொரு அசம்பாவிதமும் நாட்டில் இடம்பெறவில்லை என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இராணுவ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினமும் நாடு முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சந்தேகத்திற்கிடமான பல இடங்கள் சோதனையிடப்பட்டன.
நேற்றைய தினத்தில் மாத்திரம் தினத்தில் மாத்திரம் 5 இடங்களில் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் பொதிகளை சோதனையிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அவற்றை பாதுகாப்பாக வெடிக்க வைத்தனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்களை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் 9 பேரில் 8 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்குதல்தாரிகள் தொடர்பில் தகவல் திரட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 32 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளதுடன், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரின் பொறுப்பில் மேலும் நால்வர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.