நேற்று இரவு 10.00 மணிக்கு நாடு முழுவதும் அமுலாக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதேவேளை, கொழும்பில் உள்ள இரண்டு பிரபல விருந்தகங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் எனத் தெரிவித்து சகோதரர்கள் இருவரின் புகைப்படங்களை பிரித்தானியாவின் டெய்லி மெய்ல் வெளியிட்டுள்ளது.
இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகிய இருவரின் புகைப்படங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரும், சங்ரிலா மற்றும் சினமன் க்ரான்ட் முதலான விருந்தகங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய அப்துல் லத்தீஃப் ஜமீல் மொஹமட் என்பவர் பிரித்தானியாவில் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து அந்த நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் தென்கிழக்கு இங்கிலாந்தில் 2006-2007 காலப்பகுதியில் கல்வி கற்றதுடன், தமது உயர் படிப்பை அவுஸ்திரேலியாவில் கற்றுள்ளார்.
பின்னர் இலங்கையில் வசித்து வந்தார்.
அவர் பிரித்தானியாவில் ஏதேனும் அடிப்படைவாத நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாரா? என்பது தொடர்பான விசாரணைகளை அந்த நாட்டு அதிகாரிகள் ஆரம்பிப்பார்கள் என்று டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.
எனினும் இதுதொடர்பில் தகவல் வழங்க பிரித்தானியாவின் மெட்ரோ பொலிட்டன் காவற்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.