ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு - உரிமையை உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சி இந்தியாவில் அமையவேண்டும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 4, 2019

ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு - உரிமையை உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சி இந்தியாவில் அமையவேண்டும்!

இந்தியாவின் பொதுத்தேர்தல் 2019 பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற இக்காலப்பகுதியில் இத்தேர்தல் தொடர்ப்பான தாக்கமும் ஏக்கமும் வழமைபோல தொப்பூள் கொடி உறவுகள் என வழிவழியாக உணர்வுப்பிணைப்பில் தொடர்கின்ற ஈழத்தமிழர்களிடம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

இம்முறையும் இந்தியப்பொதுத்தேர்தல் மீது ஈழத்தமிழர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பு 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா படைகளால் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்தப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் இருந்தது.

ஆனால் துரதிஸ்டம் அன்றைய இந்திய அரசாங்கமும் அந்த இனப்படுகொலைக்கு துணைபோயிருந்ததை வரலாற்றில் ஒரு வடுவாக தமிழர்கள் மனதில் பதிந்துவிட்டது.

ஈழ விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமித்த தருணங்களில் இந்தியா அதற்கான புகலிடத்தையும் தார்மீக ஆதரவையும் வழங்கியிருந்தது வரலாற்றின் உண்மை.அன்று தொட்டு இந்தியா மீதும் இந்திய அரச தலைவர்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் ஒரு நம்பிக்கை வளர்ந்தே வந்தது.


இந்தியா தமக்கு கைகொடுத்து அபிலாசைகளை தீர்த்துவைக்கும் என ஈழத்தமிழர்கள் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். துரதிஸ்டவசமாக சிறீலங்காவின் சிங்கள இராஜதந்திரம் 1987ல் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்களில் இருந்த தம்மை காப்பாற்றிக்கொள்ள அமைதிப்படையாக வந்த இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திசைதிருப்பி முடிவில் இந்தியாவும் ஈழத்தமிழர்களின் போராட்ட அமைப்பும் மோதுகின்ற நிலைமைக்கும் மிக மோசமான உறவு விரிசலுக்கும் வித்திட்டது.

அதன் பிறகு சரியான அரசியல் புரிந்துணர்வு இல்லாத நிலையில் முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்து முள்ளி வாய்க்காலில் தமிழர்களை இந்தியா காப்பாற்றவில்லையே என்ற பெரும் அங்கலாய்ப்பும் மனக்குறையும் இற்றைவரையும் தொடர்கின்றது.


எது எப்பிடி இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் சிங்களவர்கள் நண்பர்களாக இருக்கமுடியாது. எனவேதான் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவினதும் இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களினதும் நெருக்கமும் புரிந்துணர்வும் அவசியமானது. சிறீலங்காவின் ஜனாதிபதிகளையும் அரசாங்கங்களையும் தீர்மானிக்கும் ஜனநாயக பலத்தை வடக்கு கிழக்கு வாழ் ஈழத்தமிழர்களும் மலையக மக்களும் கொண்டுள்ளனர்.

எனவே ஈழத்தமிழர்கள் தீர்மானிக்கும் சிறீலங்காவின் மத்திய அரசின் கொள்கைப்பாடுகள் இந்தியாவின் நலன்களின் அடிப்படையில் இருக்கும்படியாக இருக்கவேண்டுமென இந்தியா விரும்பும் என்பது யதார்த்தமானது. அதுபோலவே ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர்களின் நலன்களை பேணக்கூடிய ஒரு இந்திய மத்திய அரசை எதிர்பார்க்கின்றார்கள்.இந்தியாவின் மத்தியில் யார் ஆட்சி அமைக்கப்போகின்றார்கள் என்பதை ஈழத்தமிழர்கள் எதிர்வுகூறவோ அல்லது தீர்மானிக்கவோ விரும்பவில்லை. ஆனால் இனி ஆட்சியில் அமர்கின்ற இந்திய மத்திய அரசாங்கம் இதுவரை இருந்த கொள்கை நிலைப்பாடுகளில் இருந்து தளர்ந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் உரிமையுடன் கூடிய வகிபாகத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென விரும்புகின்றார்கள்.

தமது சுயநிர்ணய தன்னாட்சி அதிகார அபிலாசைகள் தொடர்பில் ஈழத்தமிழினம் கடந்த அரைநூற்றாண்டுகளாக இந்தியாவிடம் பலத்த எதிர்பார்ப்பை வளர்த்து வந்துள்ளது.

ஆயினும் இன்னமும் ஈழத்தமிழர்கள் நீதி கிடைக்காமலும் உரிமை கிடைக்காமலும் ஏதிலிகளாய் கண்ணீருடன் வாழ்கின்றார்கள். இந்தியாவிலும் அகதிகளாக வாழ்கின்றார்கள். எனவே ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்தவேண்டிய தார்மீக கடமை இந்தியாவிடம் உண்டு. அத்தகைய புரிதல் உள்ளவர்கள் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆட்சிப்பொறுப்பில் அமரவேண்டுமென ஈழத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.


இந்தியாவின் தமிழகத்தின் பொறுத்தவரை அது ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு தாய்மடி.ஈழத்தமிழர்கள் துயர்படும்போதெல்லாம் தமிழகம் அழுதிருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்காக உயிர் அர்ப்பணிப்புவரை செய்து ஈழத்தமிழர்கள் மனதில் உயர்ந்த இடத்தில் உள்ளது. தமிழகமும் கட்சி பேதங்கள் கடந்து ஈழத்தமிழர்களுக்கு உதவியிருக்கின்றது.

ஈழத்தமிழர்களுக்காக பாடுபட்டவர்கள் அநேகமாக தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளிலும் இருக்கின்றார்கள். கட்சிகளுக்கு அப்பாலும் கடலென உணர்வுடன் உள்ளார்கள். ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தின் உணர்வு நிலைக்கு மிகச்சிறந்ததும் வரலாற்று பெறுமதிமிக்கதுமான மிக அண்மைய எடுத்துக்காட்டு மறைந்த முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக சட்டசபையில் ஈழத்தமிழின இனப்படுகொலைத்தீர்மானம் மற்றும் இனப்படுகொலையை புரிந்த சிறீலங்காவுக்கு எதிராக பொருளாதார தடை விசாரணை என்பன நடத்தப்படவேண்டுமென தீர்மானம்கொண்டுவந்தபோது அதை தமிழகத்தின் சகல கட்சிகளும் ஒரு மனதாக ஆதரித்து இருந்தன.

அத்தகையதொரு தளத்தில்தான் ஈழத்தமிழர்கள் தமிழகத்தை பார்க்கின்றனர்.ஒட்டுமொத்த கட்சிகளினதும் மக்களினதும் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு தேவையென்பதே யதார்த்தம். அந்த யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுகின்றவர்களும் சட்ட சபை உறுப்பினராக வருகின்றவர்களும் ஈழத்தமிழர்கள் விரைந்து உரிமையுடன் கூடிய நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசுக்கு குரல்கொடுப்பதுடன் அதை விரைவு படுத்தவேண்டுமெனவும் ஈழத்தமிழ்ச்சமுகம் விரும்புகின்றது.

அதே வேளை தமிழகத்தின் ஆட்சிபீடத்தில் ஏறுகின்றவர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களின் ஆதரவையும் ஈழத்தமிழர்களுக்கு பெற்றுத்தர ஆவன செய்யவேண்டும் என்பதே விருப்பம்.எனவே அனைத்துலக மனித உரிமைச்சங்கம் இந்தியாவில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் காவலரணாக இருக்கக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு உரிமை நீதியும் பெற்றுத்தரக்கூடிய ஒரு நல்லாட்சி அமைய வாக்களிக்குமாறு ஈழத்தமிழர்கள் சார்பில் வேண்டி நிற்கின்றோம்.