இலங்கையில் சித்திரவதைகளிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, ஐ.ந உபகுழு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 2 ம் திகதி இலங்கைக்கு வந்த இந்த குழு, வரும் 12ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
எனினும்- இந்த குழுவும் இலங்கையின் அரசியல் மோதலிற்குள் சிக்கியுள்ளது, இராணுவ முகாம்களிற்கு நேரில் சென்று ஆராய்வதில் தடைகளை எதிர்கொள்கிறது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
மோல்டோவா நாட்டைச் சேர்ந்த விக்டர் சகாரியா தலைமையிலான இந்த ஐ.நா குழுவில், மொறிசியசைச் சேர்ந்த சத்யபூசண் குப்தா டோமா, சைப்ரசைச் சேர்ந்த பெட்ரோஸ் மைக்கலிடேஸ், பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன் லொபீஸ் ஆகியோர் அடங்குகின்றனர். அவர்கள் இலங்கையில் இராணுவ முகாம்களிற்கும் நேரில் சென்று ஆராயலாமென முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தகுழுவின் பயணம் தற்போது, சில நெருக்கடிகளில் சிக்கியுள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
இந்த குழு இலங்கையில் இராணுவ முகாம்களிற்கும் செல்ல தீர்மானித்திருந்தது. இதற்கான அனுமதியை பெற, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விண்ணப்பித்திருந்தது. எனினும், இராணுவ முகாம்களிற்கு சென்று ஆய்வு செய்ய முடியாது என பாதுகாப்பு செயலாளர் ஒரேயடியாக மறுத்து விட்டார். பின்னர், இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.
பாதுகாப்பு செயலாளரின் தீர்மானத்தை ஆதரித்த ஜனாதிபதி, ஐ.நா குழுவை இராணுவ முகாம்களிற்குள் அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
எனினும், அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற வெளிவிவகார அமைச்சர் சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தார். இந்த ஐ.நா குழுவை இராணுவ முகாம்களிற்குள் அனுமதிப்பதும் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்று. எனினும், இந்த விடயத்தை ஜனாதிபதியுடன் பகிராமல் அரசு மௌனமாக இருந்துள்ளது. ஐ.நா குழு இலங்கைக்கு வந்து, இராணுவ முகாம்களிற்குள் நுழைய தயாரான போதே சர்ச்சை உருவாகியுள்ளது.
ஐ.நாவில் இணக்கம் ஏற்படுத்திக் கொண்டதன் அடிப்படையில் இராணுவ முகாம்களிற்குள் ஆய்வு செய்ய ஐ.நா குழுவை அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் விடாப்பிடியான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.நாவில் வாக்களிக்கப்பட்டு விட்டதன் அடிப்படையில், ஜனாதிபதி தனது முடிவிலிருந்து இறங்கி வர நிர்ப்பந்திப்பட்டுள்ளார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
எனினும், இந்த விவகாரத்தில் புது சிக்கல் ஒன்று தற்போது தோன்றியுள்ளது.
அரசின் முடிவை முப்படை தளபதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஜனாதிபதியிடம் தமது எதிர்ப்பை நேரடியாகவே தெரிவித்தார்கள் என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.
முப்படை தளபதிகளை சமரப்படுத்த அரசு பகீரதப்பிரயத்தனம் செய்தபோதும், அது எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை. ஐ.நா குழு பாதுகாப்பு படைகளின் முகாம்களிற்குள் நுழைய அனுமதிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முப்படை தளபதிகளுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பேச்சில், அரசு சில விட்டுக் கொடுப்புக்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பாதுகாப்பு தரப்பின் முகாம்களை ஐ.நா குழு நேரில் ஆராய வேண்டுமெனில், எந்த விவகாரத்தில் அடிப்படையில் அந்த முகாமை ஆய்வுசெய்யவுள்ளனர், அந்த விவகாரத்தில் அந்த முகாம் தொடர்புபட்டமைக்கான ஆதாரங்களை பாதுகாப்பு அமைச்சிற்கு சமர்ப்பித்தால் மாத்திரமே, குறிப்பிட்ட முகாமை ஐ.நா குழு நேரில் ஆய்வசெய்ய அனுமதிக்கலாமென முப்படைத்தளபதிகள் கறாராக தெரிவித்து விட்டனர். அந்த நிபந்தனையை அரசு ஏற்று, ஐ.நா குழுவிற்கும் அந்த தகவலை தெரிவித்துள்ளது.
இராணுவ முகாம்களை நேரில் ஆராயலாமென்ற வாக்குறுதியை, தன்னுடன் கலந்துரையாடாமல் ஐ.தே.க தீர்மானம் ஜனாதிபதியை கோபமடைய வைத்துள்ளது.
இதேவேளை, முப்படை தளபதிகளும் விதித்துள்ள இந்த நிபந்தனையினால், இராணுவ முகாம்களிற்குள் ஆய்வு செய்யும் ஐ.நாவின் முயற்சி வெற்றியளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை எதுவும் நடத்திருக்காத நிலையில், அதற்கான ஆதாரத்தை ஐ.நா குழு எப்படி பெற்றுக்கொள்ளுமென்ற கேள்வியெழுந்துள்ளது.
இதனால், இராணுவ முகாம்களை ஆராயும் ஐ.நா குழுவின் முயற்சி வெற்றியளிக்குமா என்ற கேள்வியெழுந்துள்ளது.