மக்களுக்கு அறைகூவல் விடுத்த சிவசக்தி ஆனந்தன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 7, 2019

மக்களுக்கு அறைகூவல் விடுத்த சிவசக்தி ஆனந்தன்!

திடீரென்று ஐ.நா உபகுழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவிப்பதால் மட்டும் உறுப்பு நாடுகளின் கவனத்தை ஈர்த்து விட முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப்பேரவைக் கூட்டத் தொடருக்கு தமிழர் தரப்பில் இருந்து பலர் வருடாந்தம் செல்கின்றமை தொடர்பில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின் கால அட்டவணையும், விவாதிக்கப்படும் விடயங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை.

திடீரென்று பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் நேரத்தில் உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிப்பதால் மட்டும் உறுப்பு நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட முடியாது.

அந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எமது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்கு உதவுமே தவிர, இராஜதந்திர ரீதியில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.

அரசாங்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தனது இறைமையை முன்வைத்து பல்வேறு இராஜதந்திர நகர்வுகளைத் திட்டமிட்டு உரிய காலக்கிரமத்தில் மேற்கொண்டு வருகிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வந்து நீதியை நிலைநாட்டுவதற்குப் பற்றுறுதியுடனும் வினைதிறனுடனும் செயற்பட வேண்டிய தமிழ்த் தரப்பு தனது குறுகிய அரசியல் நலன்சார்ந்து சிந்திப்பதால் கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் நழுவவிடும் போக்கு நிலவுகிறது.

இந்த விடயத்தில் பரஸ்பர நம்பிக்கையுடன், எமது மக்களின் மீது தீராக்காதல் கொண்டு எமது எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒருமித்து செயற்படவேண்டிய நேரமிது.

தமிழ் மக்களிடம் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்காக ஆணைகேட்டுப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணையை மதிக்காமல் தனது நலன்சார்ந்து செயற்பட்டதால் எமது மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனைத் துடைத்தெறிய வேண்டியது மக்களின் நலன்சார்ந்து சிந்திப்போரின் கடமை. நாம் இன்றும் எமது முயற்சிகளைக் கைவிடவில்லை.

ஆயினும் உரிமையை வென்றெடுப்பதற்காகவும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் சகல விட்டுக்கொடுப்புக்களுடனும் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி உறுதியுடன் முன்னேற வேண்டிய நேரமிது.

இதேவேளை, இதனையே எமது அறைகூவலாக மீண்டும் மக்கள்முன் வைக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.