மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடத்தும், குற்றவிசாரணை பிரிவினரால் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் கோடையான காத்தான்குடியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம், மற்றும் மூவர் இன்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்குள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமட் காசிம் முகமட் றில்வான் என்பவன் குண்டை வெடிக்க வைத்து, 29 பேரை கொன்றான்.
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவனிற்கு உதவியவர்கள் தொடர்பாக புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணைகளிலேயே, நால்வர் கைதாகியுள்ளனர்.
தற்கொலைதாரிகளிற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார்கள் என்ற சந்தேகத்திலேயே நால்வர் கைதாகினர்.
கொழும்பிலிருந்து சென்ற விசேட புலனாய்வுகுழுவினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என இவ் விசாரணைக்காக கொழும்பிலிருந்து காத்தான்குடி சென்றுள்ள குற்றவிசாரணை பிரிவின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலுடன் தவ்ஹித் ஜமாத்திற்கு தொடர்பில்லை என ஹிஸ்புல்லா மறுத்திருந்த நிலையில் குற்றவிசாரணை பிரிவினரன் தீவிர வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு நடத்தியதாக சுமத்தபடும் குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.
தாக்குதலுக்குடன் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மலேசிய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே ஹிஸ்புல்லா இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டில் நடந்த குண்டு தாக்குதலுடன் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்படியான தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என புலனாய்வு சேவைகள் கடந்த 4 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் எச்சரித்திருந்தன.
பாதுகாப்பு பிரதானிகள் மட்டுமல்லாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
புலனாய்வு சேவைகளின் அறிக்கை கிடைத்திருந்த போதிலும் இப்படி பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய புலனாய்வு சேவைகளும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தியிருந்தது.