தமிழர்களை கைது செய்தபோது பயங்கரவாத தடைச்சட்டத்தில் தவறில்லை… இப்போதுதான் தவறுகள் தெரிகிறதா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

தமிழர்களை கைது செய்தபோது பயங்கரவாத தடைச்சட்டத்தில் தவறில்லை… இப்போதுதான் தவறுகள் தெரிகிறதா?

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டமைந்துள்ளது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது ஒரு தரப்பினர் கைது செய்யப்படும் போது மாத்திரம் அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றன என கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேகநபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில் அவரது சட்டத்தரணி அஜித் பத்திரன சவாலுக்கு உட்படுத்தியுள்ள விடயங்களை ஆராய்ந்து கொண்டிருந்த போதே நீதவான் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் நீதவான் மேலும் தெரிவிக்கையில்-



பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் குற்றம் சுமத்துவது என தீர்மானிப்பது யார், எவ்வாறு அதனை தீர்மானிப்பது என்பது தொடர்பில் சட்டத்தில் எந்த வழிகாட்டல்களும் இல்லை. பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் கூட குறிப்பிடப்படவில்லை.

உதாரணமாக தண்டனை சட்டக்கோவையின் கீழ் முன்வைக்க முடியுமான குற்றங்கள் கூட இந்த சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முன்வைக்கப்படலாம். ஒரு பாதையில் உள்ள விளம்பர பலகையை உடைத்தமை தொடர்பில், பெருந்தெருக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியும். அரசு நிறுவனம், வங்கிக்கொள்ளை என்பன தொடர்பில் தண்டனைச்சட்டக்கோவையின் கீழ் குற்றம் சுமத்த முடியும். ஆனால் அவற்றைக்கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தி, நீதிவானின் அதிகாரத்தை தூரமாக்க முடியாமலில்லை. எனினும், குறித்த குற்றம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல் செய்யப்பட வேண்டும் என்பதை யார், எவ்வாறு தீர்மானிப்பது என்பது தொடர்பில் எந்த அறிவுரையும் சட்டத்தில் இல்லை.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டுள்ளது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது எவரும் அதை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சனையாகவும் இருக்கவில்லை. எனினும், தற்போது வேறு தரப்பினரை கைதுசெய்யும்போது மாத்திரம் அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றன என கோட்டை நீதிவான் தெரிவித்தார்.