உடைகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு : திரைமறைவில் தீவிரம் பெற்ற இரகசிய பேச்சுக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

உடைகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு : திரைமறைவில் தீவிரம் பெற்ற இரகசிய பேச்சுக்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிமையான எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக இயங்கும் பாத்திரத்தை இழந்து விட்டது- மக்களின் எதிர்ப்புக்களை பூர்த்தி செய்யும் வேணாவையும் கைவிட்டு விட்டது. இந்த நிலையில் மாற்று அணியொன்று அவசியம். அதற்கு நாம் தயாராக இருக்கிறோம்“ என ரெலோ தரப்பு வழங்கியுள்ள சமிக்ஞையையடுத்து மாற்று அணியொன்றை உருவாக்கும் இரகசிய பேச்சுக்கள் தமிழ் அரசியலில் மீண்டும் சூடு பிடித்துள்ளன.

இனிமேல் தமிழரசுக்கட்சியுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லையென ரெலோவின் கணிசமான பிரதிநிதிகள் எடுத்த முடிவின்படி, மாற்று அணிக்கான பேச்சுவார்த்தையை ரெலோவே முன்கையெடுத்து ஆரம்பித்துள்ளது என்ற தகவலை மிகமிக நம்பகரமான மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் அறிந்தது.

இதன் முதற்கட்டமாக, இரண்டு தரப்பையும் ஒரே மேசையில் உட்கார வைக்கும் மூன்றாம் தரப்பினரின் ஏற்பாட்டில், ரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுக்கள் குறித்த விபரமான தகவல்களையும் தமிழ்பக்கம் பெற்றுள்ளது.



நேற்று (8) மாலை 4 மணி தொடக்கம் 6.30 மணிவரை ஈ.பி.ஆர்.எல்.எவ்- ரெலோ பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில் ரெலோ தரப்பிலிருந்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார். இந்த பேச்சிற்கு பிள்ளையார் சுழி போட்ட, மூன்றாம் தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சில் கலந்துகொண்ட ஒருவர் அது குறித்த விபரங்களை தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

தமிழரசுக்கட்சியின் தன்னிச்சையான முடிவுகளால் கடுமையான அதிருப்தியில் இருக்கும், ரெலோவின் செயலாளர் என்.சிறிகாந்தா, “இனிமேல் தமிழரசுக்கட்சியுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. அதை நான் தெளிவாக- ஆணித்தரமாக- அடித்து சொல்கிறேன். அவர்களின் வாசல்படியை மிதிக்கவே மாட்டோம். எமது வார்த்தைகளை நம்பி, நீங்கள் இந்த கூட்டு முயற்சிக்கு வரலாம்“ என ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார்.



ரெலோவின் அண்மைய சில நடவடிக்கைகளால், அவர்களின் மாற்று முயற்சி ஒருவித ஐயப்பாட்டுடன் மற்றக்கட்சிகளால் நோக்கப்பட்டது. இந்த சந்தேகத்தை பலமுறை ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பே வெளிப்படுத்தியிருந்தது. ஆனால், நேற்றைய சந்திப்பில் ரெலோவின் நிலைப்பாட்டில், சுரேஷ் திருப்தியடைந்த நிலைமை தென்பட்டதாக தமிழ்பக்கம் அறிந்தது.

“இனப்பிரச்சனை தீர்வில் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்காமல், நிபந்தனை விதிக்க வேண்டிய இடங்களில் விதிக்காமல், சர்வதேச சூழலை சரிவர கையாளாமல் ரணில் அரசை காப்பாற்றுவதில் மட்டுமே தமிழரசுக்கட்சி குறியாக உள்ளது. அரசியல்கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்கட்டமைப்பு விடயங்களில் முறையான அழுத்தம் கொடுக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் தமிழ் தேசிய அரசியலின் கூர்மையான எதிர்ப்புணர்வு இல்லாமல் போய், அடுத்தடுத்த வருடங்களில் தமிழ் தேசியம் உணர்வும், கோரிக்கையும் இல்லாமல் போய்விடும்“ என ரெலோ தரப்பால் குறிப்பிடப்பட்டது.

இதேநிலைமை நீடிக்காமல் அவசரமாக மாற்று அணியொன்றை உருவாக்க வேண்டும், அதற்கு நாம் தயார், இப்பொழுதே ரெலோ, கூட்டமைப்பிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறது என சிறிகாந்தா குறிப்பிட்டார்.

எனினும், இந்த சமயத்தில் இடைமறித்த சிவாஜிலிங்கம், உடனடியாக வெளியேறுவதில் தயக்கத்தை காண்பித்தார். பொதுக்குழு, அரசியல்குழுவை கூட்டித்தான் அந்த முடிவெடுக்க வேண்டும். அது ஒரு படிமுறையான செயற்பாடு என்றார்.



எனினும், சிறிகாந்தா- தலைமைக்குழு, பொதுக்குழுவில் அந்த முடிவை சிக்கலில்லாமல் எடுக்கலாம். இந்த குழுவின் வடக்கு உறுப்பினர்களில் செல்வம் அமைக்கலநாதன் மட்டுமே சிக்கலானவர். கிழக்கில் ஜனாதான் சிக்கலானவர். இருவரும்தான் கூட்டமைப்பை விட்டு வெளியேறகூடாதென மறுத்து வருகிறார்கள். மற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்- மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்- அந்த தீர்மானத்தை எடுக்கலாம் என தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதனின் முடிவும் முக்கியமானது, அவரது நிலைப்பாடு என்னவென சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.

“செல்வத்தை சமாளிக்கலாம். பொதுக்குழு, அரசியல்குழுவின் நிலைப்பாட்டை அவரால் மீற முடியாது. வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிக்காமலேயே செல்வத்தை நான் கட்டிப்போட்டேன். அவரை இதற்கு சம்மதிக்க வைக்கலாம்“ என சிறிகாந்தா குறிப்பிட்டார்.

அதேபோல, தேர்தல் ஒன்று எதிர்பார்க்கப்படும் சூழலில் மட்டக்களப்பின் பட்டிருப்பு தொகுதி போட்டியில் ஸ்ரீநேசன், அரியநேத்திரனின் பின்னணியில் ஜனா தொடர்பான எதிர்மறை பிரச்சாரம் இணையத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “தமிழரசுக்கட்சியினரின் இந்த நடவடிக்கையால் ஜனா அதிருப்தியில் இருப்பார். அவரையும் சமாளிக்கலாம்“ என குறிப்பிடப்பட்டது.

இதன்படி இந்த சந்திப்பில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அரசியல்கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட போராட்டங்களை மாற்று அணியாக உருவாகவுள்ள தரப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பது என்றும், வெளிநாட்டு தூதர்களை ஒன்றாக சந்திப்பது என்றும் முடிவானது. மாற்று அணியில் இணைபவர்கள் ஒன்றிணைந்து இப்படி செயற்பட, மக்கள் மத்தியில் அது ஒரு அணியான சித்திரம் உருவாகும், அதன்பின் அதை பதிவுசெய்யலாம், கூட்டணியாக அறிவிக்கலாமென்றும் முடிவானது.

இந்த சந்திப்பின் பின்னர் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோருடன் உடனடியாக பேசுவதென முடிவானது. கூட்டணிக்குள் இணைவார்களா என்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புளொட் ஆகியவற்றை நாடிபிடித்து பார்ப்பதென்றும், தேவையெனில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உள்ளீர்ப்பது பற்றி ஆலோசிக்கலாமென்றும் நேற்று தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை ரெலோ தரப்பின் அறிவிப்புக்கள், நிலைப்பாடுகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அதிக அக்கறை காண்பித்திருக்காத சூழ்நிலையில் நேற்றைய சந்திப்பின் பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எவ்  தரப்பில் அதிக நம்பிக்கை தோன்றியிருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்துவதில் இரண்டு தரப்பும் ஆர்வம் காட்டியுள்ளன.

இதேவேளை, நேற்றைய சந்திப்பின் தொடக்கத்திலேயே மிக முக்கியமான தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருந்தது. சந்திப்பு தொடர்பான தகவல்களை ஊடகங்களிற்கு கசியவிடக்கூடாதென கண்டிப்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.