எனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 8, 2019

எனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது!

இந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பிரகதி என்ற மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் சந்தர்ப்பத்தில், அதன் பின் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அந்த பெண்ணிற்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாகவும், திருமண புடவை எடுப்பதற்காக மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையிலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரகதியின் உறவினர் சதீஷ்குமார் (30) என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என்பதை தனிப்படை பொலிஸார் கண்டுபிடித்தனர். தலைமறைவான அவரை பொலிஸார் பல இடங்களில் தேடி ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

பிரகதி பள்ளியில் படிக்கும் போது இருந்து அவருக்கும், சதீஷ்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சதீஷ்குமார், பிரகதியை முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் பிரகதியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் பிரகதியும், சதீஷ்குமாரும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடுவாயூரில் சதீஷ்குமார் அடகு கடை நடத்தி வந்துள்ளார். கோவையில் பிரகதி கல்லூரியில் படித்து வந்ததால், மனைவிக்கு தெரியாமல் அவர், பிரகதியை அடிக்கடி வந்து சந்தித்துள்ளார்.



கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பிரகதியை சந்திப்பதற்காக சதீஷ்குமார் காரில் வந்துள்ளார். பிரகதி அவருடன் காரில் சென்றார். இருவரும் பொள்ளாச்சி பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது, தனக்கு திருமணம் நிச்சயமான விவரத்தை மாணவி பிரகதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், கத்தியால் பிரகதியின் கழுத்தில் குத்தி கொலை செய்து பிணத்தை பூசாரிப்பட்டி பகுதியில் போட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுவிட்டார். கோவை காட்டூர் பொலிஸார் மாணவி காணாமல் போனது குறித்து, முதலில் மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் சதீஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். சதீஷ்குமார் மனைவி, குழந்தையுடன் கோவை காட்டூர் பொலிஸ் நிலையத்துக்கு வந்து, பிரகதி காணாமல் போனது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.



இதனால் அவரை போலீசார் சந்தேகப்படாமல் விட்டு விட்டனர். பின்னர்தான் அவர் பிரகதியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்துக்கு குடும்பத்துடன் வந்து சதீஷ்குமார் நாடகமாடியது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், மாணவியின் உடல் கிடந்த பகுதியான கோமங்கலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படையினர் சதீஷ்குமாரை தேடியபோது, அவர் தொலைபேசியை செயலிலக்கச் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். பொலிஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி நேற்று அவரை கைது செய்தனர். மாணவியை அழைத்து செல்ல பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் பொலிஸாரரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


நான் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நெல்லுக்குழிகாடு பகுதியை சேர்ந்தவன். என்னுடைய தந்தை தங்கராஜ். ரூ.40 லட்சம் கடன் இருந்ததால் என்னுடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். நான் பிரகதியை விரும்பினேன். பிரகதியும் என்னை விரும்பினார். ஆனால் எனக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுக்க அவளுடைய பெற்றோர் மறுத்துவிட்டனர்.

எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருந்தாலும் தொடர்ந்து பிரகதியுடன் பழகினேன். கோவையில் கல்லூரியில் படித்து வந்த பிரகதிக்கு பரிசு பொருட்கள், சேலை, நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன். ஏற்கனவே 10 பவுன் தங்கநகை வாங்கி கொடுத்தேன்.

இதற்கிடையே மீண்டும் 10 பவுன் தங்க நகை வாங்கி தருமாறு என்னிடம் கேட்டாள். வேறு ஒருவருடன் பிரகதிக்கு திருமணம் நடைபெறுவது எனக்கு பிடிக்கவில்லை. திருமணம் ஆனாலும் என்னுடன் பழகுவேன் என்று பிரகதி கூறினாள். ஆனாலும் பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது என்று கருதினேன். வழக்கமாக பிரகதியை கோவையில் இருந்து பல்லடம் வரை அழைத்து சென்று விடுவேன்.

கடந்த வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி காரில் பல்லடத்துக்கு அழைத்து செல்லாமல் கோமங்கலத்துக்கு அழைத்து சென்றேன். காரில் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். இந்த நிலையில் நான் ஏற்கனவே தயாராக வைத்து இருந்த கத்தியால் பிரகதியின் நெஞ்சு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு உடலை பூசாரிபட்டி பகுதியில் வீசி சென்றேன். பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரகதியின் உடல் கோவை அரசு வைத்தியசாலையில் 3 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவியின் கழுத்து மற்றும் நெஞ்சில் கத்திக்குத்து காயமும், கையால் தடுத்ததால் அவரின் கைவிரல் அறுபட்டு இருந்ததும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரகதியின் உடலை பார்த்த, உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.

மேலும், இந்தியாவில் சில பகுதிகளில், இம்மாதிரியான கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாவது பெரும் வேதனைக்குரிய விடயமாகும். இது போன்ற விடயங்களில் பெண்கள் விழிப்புடன் செயற்படுவது அவசியமானதொன்றாகும்.