யாழில் வீதியொன்றில் மின்சாரசபை ஊழியர் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் மரணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

யாழில் வீதியொன்றில் மின்சாரசபை ஊழியர் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் மரணம்!

யாழ் செய்திகள்:விபத்தில் முறிவடைந்த மின் கம்பத்தை அகற்றச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர் குறித்த கம்பம் முறிந்து வீழ்ந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கு வீரப்பிராய் என்னும் இடத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வல்லியானந்தம், தூன்னாலை வடக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம் சிவசோமக்குமார் (வயது-51) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

கரணவாய் வீரப்பிராய் பகுதியில் உள்ள வீதி வழியாக லொறி ஒன்றும் கார் ஒன்றும் எதிர் எதிர் திசையில் வந்து வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட நிலையில் லொறி வீதியோரமாக நின்ற மின்சார, தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது.இதில் கம்பங்கள் முறிந்து லொறியில் சாய்ந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிசார், இலங்கை மின்சாரசபையினர் , இலங்கை தொலைபேசி கூட்டுத்தாபனத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு அவர்களும் கம்பங்களை அகற்றுவதற்காக வந்திருந்தனர்.

இதன் போது விபத்திற்குள்ளான லொறியை எடுக்க முற்பட்ட போது முறிந்திருந்த மின் கம்பம் ஒன்று மின்சாரசபை ஊழியரின் தலை மீது விழுந்ததாக கூறப்படுகிறது.இதனால் மின்சார சபை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மின்சார சபை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு அங்கிகள் எவற்றையும் அணிந்திருக்கவில்லை எனவும் முன் எச்சரிக்கையாக இல்லாது கம்பத்தை அகற்றி மின் விநியோகத்தை சீர் செய்வதற்காக தயார் நிலையில் இருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.