யாழில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞன் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி உயிரை மாய்த்துக் கொண்டார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அப்துல் றசீர் அகமது றம்ஸின் (35) என்ற இளைஞனே உயிரை மாய்த்துக் கொண்டவர்.
யாழ்ப்பாணம் ஐந்து சந்தியை சேர்ந்த இவர், கொற்றாவத்தை பகுதியில் காதல் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில், முன்தினம் (7) மனைவியுடன் ஏற்பட்ட தகறாறையடுத்து, வீட்டை விட்டு வெளியில் வந்து தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிக் கொண்டார். அவரில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், கடுமையான தீக்காயத்தால் அவர் நேற்று உயிரிழந்தார்.
கடந்த மாதமும் இதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து வெளியேறி தனக்குத்தானே தீ மூட்டியிருந்தார். கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார்.
ஒரு மாத இடைவெளியில் இரண்டு இளைஞர்கள் தமக்குத்தாமே தீமூட்டி தற்கொலை செய்தது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது