சுமந்திரனின் வேண்டுகோளால் விடுதலை செய்யப்படாத தமிழ் அரசியல் கைதிகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 7, 2019

சுமந்திரனின் வேண்டுகோளால் விடுதலை செய்யப்படாத தமிழ் அரசியல் கைதிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டதாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்களின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கத்தினால் 99 சதவீத நடவடிக்கைகளை நாம் பூர்த்தி செய்திருந்தோம். அவர்கிளன் விடுதலைக்காக ஒரு சதவீத நடவடிக்கையே இந்த அரசாங்கத்திற்கு இருந்தது.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேிசயக் கூட்டமைப்பினர் ஒருபோதும் இவர்களை விடுதலை செய்ய விரும்பமாட்டார்கள்.

இந்த அரசாங்கத்தை உருவாக்கியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று அரசாங்கத்தை காப்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இவ்வாறான நிலையில் சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ இவர்களின் விடுதலைக்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்களாயின் இதை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். காரணம் அவர்கள் வடக்கில் அரசியல் செய்ய மக்களை பொய்கூறி ஏமாற்ற இவர்கள் சிறையில் இருக்க வேண்டும் இதுதான் அவர்களின் அரசியல். சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையில் வைத்திருக்கின்றார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு 19ஆம் அரசியலமைப்பு திருத்தச்சடடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறந்த களமாக பயன்படுத்தியிருக்கலாம். அந்த திருத்தச் சட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் உட்பட நாட்டில் எவருக்கும் எந்தவொரு நன்மையும் உள்ளடக்கப்படவில்லை.

அதில் ராஜபக்ச குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரம் கட்டும் செயற்பாடே முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு இருந்தும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறப்பட்டது.அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19ஆம் திருத்தச்சட்டத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்று அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

அதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்பது சக்திவாய்ந்த ஒரு பதவி. அதையும் இவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினார்களா? அன்று அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் சர்வதேசத்திற்கு கொண்டு சென்றார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தங்களது மக்களுக்காக ஏன் எதையும் செய்யவில்லை? வடக்கு, கிழக்கு மக்களின் ஏக பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அவர்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லை. அவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு அவர்களின் சம்பாத்தியத்தை மாத்திரமே பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.