தரம் 5 புலமைப் பரிசில் பெறும் உரித்துடைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களை பரீட்சைக்குத் தோற்றுவதைக் கட்டாயப்படுத்த முடியாது என்று கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்களை தரம் 6இற்குச் சேர்த்துக் கொள்வதற்கான முழுப் பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடையது எனவும், பரீட்சைக்கு தோற்ற விரும்பாத மாணவர்களின் பெற்றோருக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டு, அவர்களின் ஒருமைப்பாட்டு ஆவணங்கள் பாடசாலையில் பேணப்பட வேண்டுமென்றும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி கல்வி அமைச்சால் இன்று வெளியிடப்பட்ட 2019/08என்ற இலக்க சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளரினது 1995.06.09ஆம் திகதிய 1995/16 என்ற இலக்கமுடைய சுற்றறிக்கை இரத்துச் செய்யப்படுவதுடன், இதன் பின்னர் 2019/08 என்ற இந்தச் சுற்றறிக்கையின் ஆலோசனைகளே நடைமுறையில் இருக்கும்.
குறிப்பிடப்பட்ட வருமான எல்லைக்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த கற்றலில் திறமைமிக்க மாணவர்களுக்கு உதவு தொகையை வழங்குவதற்காகவும் அவர்களை பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கு தெரிவு செய்வதற்காகவும் இந்த தெரிவுப் பரீட்சை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
எனினும் தற்போது அந்தப் பிரதான நோக்கங்களிலிருந்து விலகி மிகவும் போட்டிக்கான நிலை தோன்றியுள்ளதாகவும் பாடசாலைகளில் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிக்க மாணவர்களது பலதரப்பட்ட தன்மை மற்றும் அறிவுவிருத்தியைக் கருத்திற்கொள்ளாது சகல மாணவர்களுக்கும் அதிக அழுத்தம் செலுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
எனவே இதன் பின்னர் தரம் 5 புலமைப் பரிசில் பெறும் உரித்துடைய வருமான மட்டத்துக்குக் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களை பரீட்சைக்குத் தோற்றுவது கட்டாயமில்லை. மாணவர்களுக்கு எவ்விதத்திலும் அழுத்தம் செலுத்தப்படக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அத்துடன் 5ஆம் தரத்துடன் நிறைவுபெறும் பாடசாலைகளில் பயிலும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்களுக்கு 6ஆம் தரத்துக்கு பாடசாலை அனுமதி பெற்றுக் கொடுப்பது வலயக் கல்விப் பணிப்பாளர்களது பொறுப்பாகும்.
அத்துடன், மாணவர்கள் தத்தமது விருப்போடு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றாமல் இருக்க முடிவதோடு, இதுதொடர்பாக பெற்றோருக்கு அறிவுறுத்தல் வழங்கி பெற்றோரது ஒருமைப்பாடு பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணக் கோவையை பாடசாலையில் பேணுதல் வேண்டும்.
அதோபோன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு போட்டித் தன்மையை அதிகரிக்கும் நோக்கோடு சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாதைகள் போன்ற பரப்புரைச் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது.
மேலும் மாணவர்களை தரம் 6இற்கு அனுமதிக்கும் போது பின்பற்றப்படும் சுற்றறிக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வசதிகள் சேவைகள் கட்டணம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கட்டணம் தவிர்த்து பணமோ அல்லது பொருள்களோ பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது“ என்றுள்ளது.