நடுக்கடலில் முகம் குப்புற மிதந்து வந்து 40 நிமிடங்களுக்கு பின் உயிர் பிழைத்த பிரித்தானிய இளம்பெண், கடற்கரையில் உள்ள உயிர்காப்பு பிரிவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
லங்காஷயர் பகுதியை சேர்ந்த ஷெல்பி பர்ன்ஸ் என்கிற 19 வயது இளம்பெண் கடந்த ஜனவரி மாதம் 4ம் திகதியன்று தன்னுடைய நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்த போது, பெரிய அலையில் சிக்கி கடலில் தவறி விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து வேகமாக வந்த உயிர்காப்பு படையினர், இதயத்துடிப்பு இல்லாமல் மிதந்த ஷெல்பிக்கு முதலுதவி கொடுத்து ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வர 10 நிமிடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. நேரம் செல்லச்செல்ல ஷெல்பியின் உடலில் குளிர் அதிகரித்துள்ளது. பின்னர் வேகமாக மீட்கப்பட்ட ஷெல்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
40 நிமிடங்கள் கழித்து அவருக்கு இதயத்துடிப்பு மீண்டு வந்துள்ளது. இந்த சம்பவமானது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
குறுகிய கால நினைவு இழப்பு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஷெல்பி, 6 வாரங்களுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
3 மாதம் ஓய்வெடுத்த ஷெல்பி தற்போது முழுமையாக குணமடைந்ததும் தன்னை காப்பற்றிய உயிர்காப்பு படையினரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்காப்பு படையில் தானும் சேர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய உயிர்காப்பு படை வீரர் ஷான் ரைட் (45), நான் 20 வருடங்களாக இந்த வேலை செய்து வருகிறேன். அதில் நிறைய சம்பவங்களை சந்தித்துள்ளேன். ஆனால் இதுபோன்ற சம்பவங்களை 3 முறை தான் பார்த்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.