ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள்

ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள்
வரிப்புலிச் சேனையில் வரலாறுபடைத்து
ஈழமண் விடுதலைபெற ஆயுதம் சுமந்து
எதிரி எழுந்துவரும் திசையெங்கும் எதிர்த்து
தமிழர் வரலாற்றின் பலத்தை நிர்ணயித்த
ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள் …..
விழுப்புண் சுமந்து நொந்து சோராது
ஈழதேசத்தின் எல்லைகள் எங்கும் எழுந்து
தேசத்தின் புயலாகி தேசவிடுதலை காத்து
வீழ்ந்திடும் போதிலும் வெற்றிக்கு வித்திட்ட
ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள் …..
இறப்பிலும் இன்முகங்கொண்டு ஈழத்தை நினைந்து
இறுதிமூச்சிலும் இலக்கின் குறிகள் தவறாது
எந்த வேளையிலும் தேசவிடுதலையை மறவாது
தங்களின் இலட்சியம் அழியாது காத்திட்ட
ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள்….
இவர்கள் விடுதலையின் எரிமலைக் குமுறல்கள்
அன்னை மண்ணின் அக்கினிக் குழந்தைகள்
நெஞ்சை விட்டகலாத நெருப்பாற்றின் தீப்பாச்சல்கள்
கடலன்னையின் கலங்கரைக் காவிய நாயகர்களே
ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள்…..
தரையில் தனித்திறன் கொண்டு போராடி
கடலினில் கயவர் சிதறுண்டுபோகப் போராடி
வேவுப் புலியாகி வேகங்கொண்டு போராடி
கரும்புலியாகி கரிகாலன் காட்டிய திசையெங்கும் போராடிய
ஈழத்தாயின் விடுதலை வித்துக்கள்….
வான்புலியாகி வையகம் வியந்திடப் போராடினீர்
நாட்டுப்பற்றாளராய் நாலுதிசையிலும் எழுந்து போராடினீர்
கரந்தடிப் படைவீரராய் கிறங்கடித்துப் போராடினீர்
இனவழிப்பின் வலிகண்டு தீமூட்டி தியாகம்புரிந்த ஈகியரான
ஈழத்தாயின் விடுதலை வித்துக்களே….
உங்கள் போராட்ட உணர்வுகள் தட்டியெழுப்பிட
உங்கள் நினைவுகள் எம்மை வழிநடத்திட
கார்த்திகை வீரரே கல்லறை தேடியே
கையில் கார்த்திகை மலரேந்தி வந்துள்ளோம்
ஈழத்தாயின் விடுதலை வித்துகளே…..
உங்கள் சுவாசம் தாங்கிய எங்களின் சுவாசிப்பு
உந்தித் தள்ளிட எழுந்து வந்துள்ளோம்
உறுதியுடன் உங்கள் கனவு சுமக்கிறோம்
உரிமைப் போரிலே உங்கள் பயணம் தொடரும்
ஈழத்தாயின் விடுதலை வித்துக்களே….
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்
என்றெழுந்தவரை யார் யார் வரினும்
எப்படை எதிர்த்து வந்து நின்றபோதும்
வெந்து தணியுமா எங்களின் விடுதலைப் பயணம்
ஈழத்தாயின் விடுதலை வித்துக்களே….
நீங்கள் உறங்குமிடம் கல்லறை என்றெண்ணி
கயத்தனத்துடன் சினங்கொண்டு அழித்தான் சிங்களவன்
யார்சொன்னது மாவீரம் உறங்குவது கல்லறையென
நீவீர் உறங்குவது மானத்தமிழரின் மனங்களில்
ஈழத்தாயின் விடுதலை வித்துக்களே….
நன்றி வணக்கம்