தேசத்தின் குரலாம் பாலா அண்ணன் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் வரை எமது இயக்கம்
தள்ளப்பட்டிருக்காது. சக்தி கொண்ட தன் குரலால் நாலா திசையும் அதிர வைத்திருப்பார்!
மகுடிக்குக் கட்டுப்படுகின்ற நாகம் போல அவர் மந்திரக் குரலுக்குக் கட்டுப்பட்டிருக்கும் அரசியல் உலகம்! மந்திரக் குரலல்ல அது ஈழத்தின் இராஜதந்திரக் குரல்!
பகைப் புலமும் அஞ்சி நடுங்கும் அவர் வாக்கில்! நகைச்சுவையும்
பொங்கித் ததும்பும் அவர் நாக்கில்!
தேசிய நிகழ்வுகள் என்றால்
ஈழத்தேசியனாய் உடை உடுப்பார்! போரியல் களங்கள் என்றால் சீருடையில் மிடுக்கிருப்பார்!
பேச்சு வார்த்தைக் களங்களில் எதிரிக்குச் சொல்லாலே மூக்குடைப்பார்!
பேசாத நேரங்களில் மெனத்தால் விடை கொடுப்பார்!
மூன்று தசாப்தங்கள் எம் தேசத்தின் தூணாக நின்றவரே! வீணாகப் போய் விடாது உனது தியாகம்! தேனாகப் பாய்ந்து அசதி நீக்கித்
தானாக ஊறும் உற்சாகம்!
தன் குடும்பத்தைப் போல தான் பிறந்த நாட்டைத் தனதாக்கிக் கொள்ள
இறுதி வரை போராடிய நல்வீரம்! உன் வீரம்!
இட்டு நிரப்ப முடியாத இழப்பென்று உன் இழப்பை நெஞ்சைத் தொட்டுச் சொன்னார் எம் தலைவர்.
பொறுப்பேற்க ஆளில்லாத குடும்பம் போல எம் தலைவன் வேதனைப்பட்டான்
உன் இழப்பைக் கண்டு.
பாராட்ட வேண்டிய இடத்தில் பகைவனைக் கூடப் பாராட்டுவது உன் பண்புடைமை! பார் போற்றும் கூரிய அறிவு கொண்ட பாலா அண்ணன் ஈழ மண்ணின் உடைமை!
தன்னுடைய தன்மையில் குறை வாராமல் வாழ்ந்த நிறை குணம் உடையவரே!
உன்னை ஈழமண்ணல்ல, உலகில்
எந்த மண்ணும் தாங்கும்! உன் தியாகம் தான் நாளை ஈழத்தை வாங்கும்!
வில்லேர் பகையுழவர் வரிசை கட்டி எத்தனை வரினும் எங்கள் வரிசைப் புலியாம், சொல்லேர் உழவன்
பாலா அண்ணனின் முன் தவிடு பொடி தானே!
அடிமையிருளை அகற்ற வந்த அணையா விளக்கு! அணைந்து ஆண்டுகள் பத்தானாலும், அணையாது
எம் தேசமெங்கும் ஒளிரும் உன் புகழ் விளக்கு!
உலக சமூகம் போற்றுகின்ற வித்தகன்
புலிகள் சமுத்திரத்தில் தோன்றிய முத்தவன்!
சத்தியத்தின் வழி நின்றவனை இழந்து
ஆண்டுகள் பத்து! பாலா அண்ணன்
தமிழீழத்தின் சொத்து!
தேசத்தின் குரல் மறைந்து ஒரு தசாப்தம்
தேசம் மறக்காத சகாப்தம் அல்லவா எங்கள்
தேசத்தின் குரல்! தமிழ் மக்களின் நேசத்தின் குரல்!
அசரீரியாய்க் கேட்கும் உறுமல் குரல்!
த. மதி