புறனானூற்றுப்புத்திரன் தலமையிலே! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

புறனானூற்றுப்புத்திரன் தலமையிலே!



புறனானூற்றுப்புத்திரன் தலமையிலே
அறம் வளர்த்த போர் செய்து
கலிங்கத்துப் பரணி பாட
களங்கண்ட மாவீரா
தேசமே நேசம் என்றும்
தேசியமே சுவாசம் என்றும்
தலை நிமிர்ந்த தமிழன்
தாழ் பணியா நிலை அகற்றி
நஞ்சினை நெஞ்சில் ஏந்தி
மண்ணைப் பறித்தவனின்
எண்ணக் கருத்துக்களை
மண்டியிட வைத்த மாவீரனே
உன் முகங்களைக் காண்கின்றேன்
குரல்கள் கேட்கின்றன
வீழ்கின்ற போதிலும்
விதையாக முளைத்து
சாகின்ற வேளையிலும்
சரித்திரம் படைத்தாயே
மாமனிதப் பிறப்பில்- நீ
மடிந்து போனாலும்
மன்றத்தில் உன் பெயர்
மகுடம் சூடி வாழும்…

ஊருக்கு வெளியே சுடுகாடு
ஊரெல்லாம் சுடுகாடாய் ஆனது அன்று
தமிழனின் தலை விதி மாற்றி எழுதப்படும்
தரணியில் உன் பெயர் கல்லில் வடிக்கப்படும்
கார்த்திகை மாதத்தின் கலங்கரை விளக்குகளே
கடவுளுக்கு அணிவிக்கப்படும் கார்த்திகைப்பூ நீங்கள்
உங்கள் காலடியில் தமிழன் கனவுகள்
கருக்கொண்டு கிடக்கின்றன
தாயின் கருவறையை புலி கிடந்த
குகை என்று
அழைத்திட்டார் சங்கத்தில்
நந்திவர்மன் கதை சொல்லி
வித்தாகிப்போன வீரத்தமிழன் நீ
தீ எரியும் தேசத்தில் தினம் தினம்
உன் நாமம் சொல்லி
கல்லறைக்கு வந்துன்னை
முத்தமிட ஆசை….


மஞ்சள் அரைத்து
குஞ்சி அழகு பார்த்து
மஞ்சத்தில் வாழ்ந்த
விஞ்சிய காதல் தேசம்
மழலைகள் சுமந்த மடியில்
குண்டுகளைச் சுமந்தாயே
மரணம் தாண்டிய மனிதனே
ஆண்ட பரம்பரையின் அடுத்த சொத்தே
கோடி பெறினும் கொள்கையில்
மாறாத மறத்தமிழா
போர்ப்பறை கேட்கிறது
மீண்டும் எழுந்து வா…

கங்கைமகன்