ஒற்றைத் தீக்குச்சியாய் எழும்பி நின்று தெறி பொறிக்க
பல ஆயிரம் நெருப்பு பிழம்புகள் உனைத் தொடர
இன்றும் ஆறாத புகையாய் எங்கள் மனது பரிதவிக்க நாட்டிற்காய்
எங்களை இன்னும் நம்பிக்கை நட்சத்திரங்களாக
நாட்டு பற்றுடன் எழும்பி நிற்க வைத்த எம் சேனைத் தலைவருக்கு
சிரம் வணங்கி இதோ ஒரு கவிதைத் தொகுப்பு
மண்ணுக்காக மரணித்தவர்கள்
நீங்கள் மண்ணுக்காக மரணித்தவர்கள் அல்ல
இம் மண்ணில் விளைந்த மாணிக்கங்கள்
எங்கள் மனதில் புதைந்த பொக்கிஷங்கள்
பிறப்பு என்பது இயற்கை என்றால்
மரணமும் இயற்கை தானே
ஏன்உங்களுக்கு மட்டும் அது செயற்கையாய் போனது
மொட்டாகி உருவாகி தாய் மடியில்
சிறிய பூக்களாய் மலர்ந்து தாய் மண்ணில் வசமிக்கும் முன்
ஏன் கருகி போனீர்கள் உருவிழந்து
புரியாத வயதில் மண்ணைத் தின்றீர் உன் தாய் உன்னைத் திருத்தினார்
புரிந்த வயதில் மண் வீடுக்கட்டி விளையாடி மகிழ்ந்தாய் உன் தாய் பூரித்தார்
ஆனால் எல்லாம் புரிந்து தெளிந்து இம் மண்ணிற்காகவே
உரிமைப் போராடி இம் மண்ணிற்குள்ளேயே புதைந்தீரே
ஏனம்மா …அவர்களுக்கு தட்டி பறிப்பவர்களையும்….
தட்டிக் கொடுப்பவர்களை அடையாளம் காண மறந்து போனாய் !!
உதயமாகா என் தேசத்தில் உதித்து நிற்கும் சூரியக் குமாரக் குமாரத்திகளே
மரணத்தை மட்டுமல்ல என் மனதையும் கசக்கி பிழிந்த கண்மணிகள்! நீங்கள் !
தேசத்திற்காக தேகத்தைக் கொடுத்த நீங்கள்!
இச்சுயநல உலகில் தாய் மண்ணுக்காக தன்னலம் வெறுத்து
உருக்குலைந்த தியாகச் சிந்தாமணிகள் நீங்கள்!
ஆம் உடன்கட்டை ஏறிய உமையாள்கள் நீங்கள் !!
உங்கள் தாவணிக் கனவுகளை உம் தேசத்தின் கனவுகளாக்கி
உங்கள் தேகத்தை சிதைத்த தேவைதைகள் நீங்கள் !
உன் கயல்விழிக் கண்ணாலே காதல் மொழிப் பேசிடும் முன்
காலன் மாயப் பழி செய்தது தான் ஏனோ!!
மஞ்சள் அரைத்து உம்முகங்களில் பூசி அழகுப் பார்த்த நீங்கள்
நம் மண்ணென்று, தேசமென்று, கரிகளையும், கருவண்ணம் ஏற்றி
எதிர்த்துப் போர்புரிந்த நாச்சியார் நீங்கள்!
அடுக்களையிலும், வயல்வெளியிலும், பள்ளிக்கூடத்திலும்
பாடித் திரிந்த எம் பைங்கிளிகள்
புயலென எழுந்து விடுதலை என்று வீரம் செறிந்து நின்ற விளைநிலங்கள்
நீங்கள்!
குடித்தனம் பண்ணி அடுத்த தலைமுறையை உருவாக்கும் தளிர்கள்
பேடித்தனம் பண்ணும் தோட்டாக்களுக்கும் , ஈனச் செயலுக்கும் தளர்ந்து
தப்பாமல் போனதென்ன !
வீழ்வதும் அழகே நீரருவியாய் இருந்தால்
தலை தாழ்வதும் அழகே நெற்கதிராய் இருந்தால்
தொடர்த் தோல்விகள் அழகே அலைக்கடலாய் இருந்தால்
சிதறல்கள் அழகே விண்மீனாய் இருந்தால்
கதறலும் அழகே கார்முகிலாய் இருந்தால்
ஆனால் தமிழழகை , தமிழைக் காக்க நல் உருவாய்
இருந்த நீர் பிணக்குவியலாய் அழிந்தது உனது பிழையோ?
மாவீர வீராங்கனைகளே , நீரே இயற்கையின் இலக்கணப் பிழையோ?
இது இயற்கையின் விதி அல்ல… செயற்கையின் சதி….
பிடித்தவர்களை பிரிந்து வாழ முடியும் …
ஆனால் அவர்களை மறந்து வாழ முடியாது ……
ஆம் வீர வீராங்கனைகளே …..நீங்கள் எம் உயிரில் , உணர்வில் கலந்ததால்
தினம் தினம் சுவாசிக்கிறோம் உங்களை ……….