சிகரம் தொட்ட பெண்மை…. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

சிகரம் தொட்ட பெண்மை….


கந்தகம் சுமந்த காந்தள் மலர்களை
கண்ணுக்குள் காத்த கார்த்திகைப் பூக்களை
வீரத்தின் உச்சம் தொட்டு வித்தான வீரமறவரை
வணங்கி வழிபடும் கார்த்திகை மாதமதில்
கனமான கனதியான வணக்கங்கள் அனைவருக்கும்….
பெண்மைக்குள் பூகம்பமான
பெண்ணினத்தின் பெரும் சவாலான
வளர்வோம் நிமிர்வோமென
புது வேகங்கொண்ட எம்
ஈழத்துப் பெண்மை எல்லாம்
ஈழ வரலாற்றில் தடம் பதித்து
சண்டைக்குச் செல்ல
சண்டை பிடித்த பெண்ணினம் பற்றி
இன்றைய பொழுதில் மாவீரர் மாதமதில்
இயம்புதல் தகுமே…

முறத்தால் புலியடித்த
முந்தையர் கொடி வந்தவள்
முன்னின்று போர் புரிய
முப்பொழுதும் முந்தியவள்
வேதனையைத் தந்தவரை
வேகடித்துவிடத் துடித்தவள்
அண்ணன் தொட்ட ஆயுதத்தை
ஆசையாய்த் தமதாக்கியவள்
அன்பு பாசம் யாவையும்
அன்னை மண்ணுக்காய்
மென்று விழுங்கியவள்…

களமுனைகளை வீடாகவும்
சண்டைகளை தன் வாழ்நாளாகவும்
கொண்டவள்
சுமைகளை சுகமாக நினைத்தபின்
சுமப்பது சுமையாக தெரிந்திராதவள்…
தேசவிடுதலை ஒன்றே மூலதனமாக்கி
ஓய்வொழிச்சல் நேரங்களை இரையாக்கி
நித்திரா தேவிக்கு நிந்திப்பு
நள்ளிரவுக்குத் தண்டிப்பு என
இரவு பகல் நேரங்களை வரையறுக்காதவள்…

சாதிக்கவேண்டுமென்ற ஓர்மம்
தனித்தியங்க வேண்டுமென்ற துடிப்பு
முடியாது என்பது அவள்
அகராதியில் கொள்ளாதவள்
ஓய்வாய் இருப்பதென்பதற்கு ஒத்துவராதவள்
கண்டிப்பும் கறாரும் கொண்டு
கட்டளையிடும் தகமை கொண்ட
பரோபகாரிகள் எம் ஈழத்துப்பெண்புலிகள்…

சுதர்சினி நேசதுரை