அர(ச)சே படையினர் அப்பாவிகளா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

அர(ச)சே படையினர் அப்பாவிகளா?

இறைமை உள்ள ஒரு நாட்டிற்கு அந்நாட்டு இராணுவத்தின் பங்கும் பயனும் மிக மிக அத்தியாவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.எனினும் குறித்த இராணுவத்தின் அனைத்துக் கட்டமைப்புக்களும் அரசியலுக்கு அப்பால் கட்டுறுதி குலையாது கடமை செய்ய வேண்டும். அதன் போதே அவர்கள் நாட்டு மக்கள் மத்தியில் தேசிய வீரர்களாக மதிக்கப்படுவார்கள்.பல்லினச் சமூகங்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் குறித்த ஒரு சமூகத்தின் சௌகரியத்தை மட்டும் கருத்தில் ஏந்தி செயற்படக்கூடிய படை கட்டமைப்பை அல்லது பாதுகாப்பு தரப்பை எவ்வாறு தேசப்பற்று உள்ளவர்கள் என்றோ அல்லது தேசிய வீரர்கள் என்றோ கொள்ள முடியும்.இது எமது இலங்கை மண்ணில் அன்று தொட்டு வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகத்தின் பெருஞ்சந்தேகம்.
இலங்கை தீவில் ஏக காலத்தில் கால் பதித்த இனங்களுக்கிடையிலான பெரும்பான்மை சிறுபான்மை என்ற பெரும் போட்டி பெற்றெடுத்ததே மூன்றறை தசாப்த கால ஆயுதப்போராகும். இதன் இரு துருவங்களாக அரசாங்க படைகளும் விடுதலைப்புலிகளும் ஆக்கிரமிப்பு போரில் ஈடுபட்டனர். இரண்டு; தரப்பினருடனும் இரு வேறு இனச்சமூகங்கள் சார்ந்திருந்ததால் சமரசங்கள் பேச வேண்டிய சூழல் தவிர்க்கவியலாது போனது. எனினும் பெரும்பான்மையினரின் இதய சுத்தியற்ற கொள்கைகளால் பேச்சு மேசைகள் சுவாசமற்று போனது. அதனை சாதகமாக்கிக் கொண்ட அரச தலைமை சர்வதேச சக்திகளின் உசாத்துனை கொண்டு ஈரினம் சார்ந்த போரை ஓரினத்தை ஒடுக்கி வெற்றியும் கண்டது.
இங்கு தான் இறைமை உள்ள இலங்கை தேசத்தின் பௌத்த வழி வந்த இராணுவப் படைகள் தமது அநாகரிக போர் தர்மத்தை பறை சாற்றி உள்ளனர்.இனம் சார்ந்த யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டு விட்டு மனிதாபிமான போர் நடத்தியதாக மாசற்றும் இலங்கை படை தரப்பின் மீது தான் அதே சர்வதேசம் இன்று போர்க் குற்றத்தை புட்டு வைக்கிறது. அன்றைய சமரசத்தின் பங்காளிகளாக இருந்த தமிழர் இன்றைய அரங்கேற்றத்தில் வெறும் பார்வையாளர்காளக மடடுமே இருக்கிறார்கள்.இலங்கை அரசுப்படைகள் மேற்கொண்டதாக சொல்லப்படு;ம் போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வலியுருத்தி வருகிறது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை. அதன் 2017ம் ஆண்டிற்கான தீர்மான நிறைவேற்றத்தின் இறுதிக் காலப்பகுதியில் இக்கட்டுரை எழுதும் படியாகிறது. nஐனிவா தீர்மானம் தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்திய தரப்பினரும் பாதுகாக்கப்பட்ட தரப்பினரும் தத்தமது அணிகளுக்குள்ளேயே தடுமாறிக் கொண்டும் தடம்மாறிக்கொண்டும் இருக்கின்றனர்.
2015 இல் கொண்டுவரப்பட்ட nஐனீவா தீர்மானத்தை இனை அனுசரனையுடன் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசானது இன்றுகளில் நா பிரள்வுக்கு உட்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமர் உட்பட ஆளும் தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.அதாவது எந்தச்சூழ் நிலையிலும் பொறுப்புக் கூறல் என்ற விடயத்திற்கு கலப்பு நீதிமன்றமோ அல்லது சர்வதேச விசாரனையோ ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் எத்தகைய சந்தர்ப்பத்திலும் நாட்டைக் காத்த இராணுவத்திற்கு எதிராக குற்றப்பத்திரம் தயாரிக்கவோ தண்டனை வழங்கவோ இடமளிக்கப் போவதில்லை எனவும் சூழுறைத்து வருகின்றனர்.சர்வதேசத்தை ஏமாற்றினாலும் ஏமாற்றுவோமே தவிர எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்று கூச்சலிடுபவர்களா நல்லாட்சி நாயகர்கள். சிறுபான்மைகளை சிதைத்தேனும் அவர்களது உரிமைப் போராட்டத்தை நசுக்கிய தேச பிதாக்களின் தியாகத்தை மதிக்கிறார்களா? இல்லை மறைக்கிறார்களா?
ஏன்று புரியவில்லை.இவ்வேளையில் இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் சுய ஒழுக்கம் பற்றியும் பணி ஒழுக்கம் பற்றியும் ஒரு சில விடயங்களை பார்த்தாக வேண்டும். இறுதிப்போறுக்கு முந்திய காலம் இறுதிப்போர்க்காலம் இறுதிப்போருக்கு பிந்திய காலம் என மூன்று காலத்திலும் முப்படை சார்ந்தவர்கள் புலனாய்வு தரப்பினர் மற்றும் பொலிசார் என்படுவோர் தமது அடக்கு முறை எண்ணக்கருவை முன்னிறுத்தி மேற்கொண்ட குற்றமிழைப்புக்கள் ஏராளம் மனம்பேறி ஏன்ற சிங்கள யுவதிக்கு இழைத்த கொடுமையில் தொடங்கி செம்மனையில் கிருசாந்தி வேலனையில் சாரதாம்பாள் மன்னாரில் கமலிதா அம்பாறையில் கோனேஸ்வரி அச்சுலியில் ரஜனி முள்ளிவாய்க்hகலில் இசைபிரியாக்கள் என தொடரும் வன்கொலைகளுக்கு இலங்கை இராணுவத்தினரே காரண கர்த்தாக்கள். இதைவிட இறுதிப்போருக்கு முந்திய காலத்தில் பல பத்துக் கூட்டுப்படுகொலைகளை புரிந்த பெருமையும் கூட அவர்களையே சாரும். இவற்றுள் ஒரு சிலருக்கு மட்டுமே தவிர்க்க முடியாத தற்காலிக தண்டனைகள் அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்களும் மேன்முறையீட்டில் மீண்டுவிட்டார்கள். ஏனைய அனைவரும் அதிகார வர்க்க ஆதரவில் காப்பாற்றப்பட்டார்கள். காப்பாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். 2009 இறுதிப்போரின் போது மனித குலத்திற்கு எதிரான பல குற்றங்களை இராணுவத்தினர் செய்திருந்தனர். அதற்கான ஆதாரங்களை காணொலிகளாக அவர்களே சிலருக்கு விநியோகித்திருக்கின்றனர். அவற்றின் ஆதார தொகுப்பே சணல் 4 காணொலி வெளியீடுகள் ஒரு ஜனநாயக அரசின் அறை கூவலை செவியேற்று சரணடைந்த அதே நாட்டுப் பிரஜைகளை அதாவது போராளிகளை நிர்வானப்படுத்தி வகை தொகையின்றி வன்கொடுமைக்கு ஆளாக்கியது அரசபடை. பெண் போராளிகள் பலர் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் பரிக்கப்பட்டார்கள்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தலைமைப்போராளிகளை சித்திரவதைப்படுத்p கொலை செய்ததும் இலங்கை புனிதப்படையின் கொள்கையில் ஒன்றுதான். முப்படையின் உளவுத்துறையினரால் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். யாழ் மாவட்டத்தின் பலாலி பகுதி மற்றும் வரணிப்பகுதியில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்த மக்களுடைய சில வீடுகள் சித்திரவதை கூடங்களாக பயன்படுத்தப்பட்டிருந்தமை அன்மையில் வெளியானது. அது தவிர முல்லைத்தீவில் கோட்டா முகாம் திருகோணமலை நிலத்தடி வதை கூடமான கண்சைட் முகாம் கொழும்பு சைட்டம் வீதியில் கிட்டுபம்பு முகாம் போன்றவை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளை வானில் கடத்தப்படுபவர்களை மறைத்து வைக்கும் வதை மையங்களாக செயற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.வவுனியா மன்னார் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் சித்திரவதையின் பின் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு களனி கங்கையில் போடப்பட்டதாக புலனாய்வு தரப்பினரால் நீதிமன்றில் சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றங்களை புரிவதற்கு கட்டளை ரீதியாக அல்லது ஆலோசனை ரீதியாக செயற்பட்டவர்களை நல்லாட்சி அரசும் கூட பாதுகாத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செயல்களை வெறுமனெ பாதுகாப்பு தரப்பின் அடிமட்ட சிப்பாய்கள் மீது சுமத்திவிட்டு கட்டளைதாரிகள் சும்மா இருந்துவிட முடியாது.பல சம்பவங்களுடன் இராணுவத்தின் கேணல் மேஜர் கப்டன் கோப்ரல் தர அதிகாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள். இதனை தவிர ஒப்பந்த கடத்தல்களில் கொலைகுற்றங்களில் ஈடுபட்டதாக கடந்த ஆட்சியின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரும் உயர்பொலிஸ் அதிகாரிகளும் கூட கைதாகி வருகிறார்கள். இது தன்டனை வரை தாக்குப் பிடிக்குமா என்பது வேறு விடயம். குற்வாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தன்டிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால்தான் கண்டும் காணாமல் விடப்படுகிறார்களா என்ற அவப்பெயரை நல்லாட்சி அரசும் சந்திக்க நேரிடலாம.; அன்மைக் காலங்களில் நாட்டின் நாலா புறமும் பாதாள உலக கும்பல்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளமையை காணலாம். இத்தகைய கும்பல்களின் தலைவர்கள் என தம்மை கூறிக் கொள்பவர்களும் சரி அவர்களின் கைக்கூலிகளும் சரி இதில் அனேகமானவர்கள் முன்னாள் இராணுவ படையை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
இவர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் யுசஅலஇயேஎலஇளுகுஇளுவுகு என தாம் வகித்த துறைப்பெயரே அவர்களின் அடை மொழியாக பயன்படுத்தியே பிரபலமடைந்துள்ளார்கள். பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள பாதாள குழுவை சேர்ந்தவர்களிடம் கதை கொடுக்கும் போது தங்களது வீர தீர செயல்களை அளந்து கொட்டுகிறார்கள். தமது பிரதான செயற்பாடுகளாக கப்பம் போதைப்பொருள் விற்பனை ஒப்பந்த கொலை கொள்ளை மிரட்டல் கடத்தல் என்பவற்றை குறிப்பிடுகிறார்கள். மேலும் தமக்கான துப்பாக்கி கைக்குண்டு தேவை ஏற்படின் இராணுவ சீருடை போன்றவற்றை படைவிட்டோரிகளிடம் இருந்து பணம் கொடுத்து பெறுவதாக தெரிவிக்கின்றனர்.
இன்று சிறைகளில் இருக்கின்ற கைதிகளில் 1ஃ3 பகுதியினர் இராணுவ பின்னனியை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். எனவே இத்தகைய இராணுவப் படைகள் குற்றம் செய்திருக்கவே மாட்டார்கள் என்று கண்னை மூடிக்கொண்டு கூப்பாடு போடுபவர்களை எவ்வாறு சொல்வது. இவர்கள் தான் போர் ஓய்ந்த வடக்குப் பூமியில் படையெடுத்து நிற்கிறார்கள்.தமிழ் மக்கள் காணிகளிலும் வாழ்விடங்களிலும் மேலாதிக்க எண்ணத்துடன் நிலைத்திருக்கும் இராணுவத்தினர் அங்கிருந்து மக்களின் சத்தியா கிரகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாற்றிடம் நாடி போகையில் மக்களின் சொந்த வீடுகளை தரை மட்டமாக இடித்து அழித்துவிட்டுப் போகிறனர். இது அவர்கள் எந்தளவிற்கு தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வு கொண்டுள்ளார்கள் என்பதற்கொரு உதாரணமாக கொள்ள முடியும்.
இவ்வாறான குணம் குறியும் சினமும் கொண்ட இராணுவத்தினர் தான் தற்போதும் கூட வடக்கு மண்ணில் இருந்து மனிதாபிமான பணி செய்கிறார்கள் என்று அரசாங்கம் கூறி வருகிறதா? நடுநிலை கருத்தூக்கம் மிக்க மனிதர்களே நீங்கள் சொல்லுங்கள் வடக்கில் வாழும் 4 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதாசாரம் நியாயமானதா? இலங்கையில் வேறெந்த சிங்கள பிரதேசத்தி;லாவது இவ்வாறு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதா?எந்த சிங்கள மக்களினதும் பல்லாயிரம் ஏக்கர் சொந்த காணிகளை அபகரித்து ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறதா? தமது பாரம்பரிய வாழ் நிலத்தை கோரியும் ஜனநாயக அரசொன்றினால் திட்டமிட்டு காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடியும் எந்தவொரு சிங்கள மக்களும் மாதக்கணக்கில் வீதி வழி நின்று போரடி இருக்கிறார்களா? அல்லது அப்படி செய்யவிட்டு அரசுதான் வேடிக்கை பார்க்குமா? இப்போது சொல்லுங்கள் ஏன் இந்த எதிர்ப்பரினாமம். இது தொடருமெனின் எப்படி எம்மண்ணில் நல்லிணக்கமும் சமாதாணமும் சகவாழ்வும் சாத்தியப்படும்.


-விவேகானந்தனூர் சதீஸ்