லைக்கா-150 வீடுகள்-ரஜினி’ என்கிற நச்சு வட்டத்தின் சுழலில் சிக்கிய ஈழத்தமிழர் வாழ்வு! – இரா.மயூதரன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

லைக்கா-150 வீடுகள்-ரஜினி’ என்கிற நச்சு வட்டத்தின் சுழலில் சிக்கிய ஈழத்தமிழர் வாழ்வு! – இரா.மயூதரன்!

சொந்த இனத்தவரின் இரண்டகத்தினால் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியதாக ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு துரோகத்தின் நிழலில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதன் அண்மித்த சாட்சியாகவே, திரைப்பட நடிகர் ரஜினியை வைத்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் திருவிளையாடல் அமைந்துள்ளது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறுதலின்றித் தொடரும் மோசடி!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குற்றங்களை மூடி மறைப்பதுடன், அது குறித்தான கேள்விகள் கேட்கப்படும் சூழலை இல்லது செய்வதுமே சிங்கள ஆட்சியாளர்களின் தலையாய கடமையாக இருந்துவருகிறது.

இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை தனக்கு சாதகமாக்கி இனப்படுகொலை குற்றங்கள் குறித்த சகல முன்னெடுப்புகளையும் வெற்றிகரமாக தடுத்தாண்டுவரும் சிங்களம் தமிழர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக கேளிக்கை, கொண்டாட்ட நிகழ்வுகளை தமிழர் தாயகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறுதலின்றி இச்செயற்பாடு இந்திய அரசின் பரிபூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகம் இந்த வேலையை செவ்வனே செய்து வருகிறது. கொழும்பு விமான நிலையத்திற்கு நேரில் சென்று ரஜினியை வரவேற்க இந்தியத் துணைத் தூதர் தயாராக இருந்தமை அதன் சாட்சியாகும். இந்தியாவில் இருந்து எத்தனையோ பிரதிநிதிகள் வந்து செல்கிறார்கள் அவர்களை நேரில் சென்று அழைக்காத துணைத்தூதர் ரஜினியை அழைக்கச் செல்ல இருந்தமை எதனால்…?

ரஜினியின் வருகை மூலம் உடனடியாக அவர்கள் அடைய நினைத்த விடயமாக ஜெனீவாவில் நடந்தேறிய அநீதி குறித்து உலகத் தமிழர் பெருவெளியில் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெறாது தடுப்பதுடன் தாயகத்தில் தன்னெழுச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் போராட்டங்களை வலுவிழக்கச் செய்தல் அல்லது இருட்டடிப்புச் செய்வதற்கே ஆகும்.

முடிவின்றித் தொடரும் பிரச்சினைகளும், தமிழ் அரசியல் தலைமையின் பாராமுகமும் மக்களை போராட்டக் களத்தில் நிறுத்தியுள்ளது!

அறுபத்தைந்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட தமிழர்களின் காணிகள் சிங்கள பௌத்த பேரினவாத இனப்படுகொலை இராணுவத்தால் வல்வளைபு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேலும் தமிழர்களின் நிலங்கள் இராணுவ முகாம் விரிவாக்கம், சிங்களக் குடியேற்றம் என்ற பெயரில் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகிறது.

சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நேரடியாக சிங்கள இராணுவத்திடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என பல்லாயிரம் தமிழ் இளைஞர், யுவதிகள் நிலை குறித்து எந்த உறுதியான தகவல்களும் இதுவரை இல்லை.

வழக்கு விசாரணைகள் ஏதுமற்ற நிலையில் சிறைக்கூடங்களில் பலியாடுகளாய் மரணத்தின் நிழலில் வாழும் அரசியல் கைதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவித அடிப்படை கட்டுமான உதவிகளோ வாழ்வாதார உதவிகளோ அரசு சார்பில் செய்யப்படவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் இவ்வாறான உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் கையறு நிலையே இதற்கு சாட்சி.

ஐந்து பேருக்கு ஒரு இராணுவம் என்ற விகிதத்தில் தமிழர் தாயகத்தை இனவழிப்பு இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் சூழலில் தங்குதடையின்றி கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் கஞ்சா மூலம் வட மாகாணப்பரப்பெங்கும் போதை சாம்ராச்சியம் கொடிகட்டிப் பறக்கிறது. இது மட்டுமன்றி மதுப் பயன்பாடும் தாராளமயப்படுத்தப்பட்டு இளைய தலைமுறையை சமூகவிரோதிகளாக்கிக் கொண்டிருக்கிறது.

இதுப்போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் தமிழர்களின் தலைமீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் நம்பி நின்ற அரசியல் தலைமைகளின் பாராமுகத்தினால் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதை உணர்ந்து தாமே போராட முன்வந்துள்ளார்கள். இதனை பிழைப்புவாத தமிழ் அரசியல் தலைவர்களும் பேரினவாத சிங்கள அரசும் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

ஒருபக்கம் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை தொடர்ந்து வரும் மக்கள் மறுபுறம் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தியதான ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிகளிலும் அணியமாகி தமிழர் தாயகத்தின் உண்மை நிலையை வெளிச்சம்போட்டு காட்டிநிற்கின்றனர்.

நல்லாட்சி அரசை காப்பாற்றவே வீடு வழங்கும் விழா திட்டமிடப்பட்டது!

சம்பந்தன், சுமந்திரன் மற்றும் புலம்பெயர் புல்லுருவிகள் சிலரின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தபட்டிருக்கும் நல்லாட்சி முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களை வலுவிழக்கச்செய்து தாயக மக்களை திசைதிருப்பும் சதித்திட்டத்தின் அடிப்படையிலேயே ஞானம் அறக்கட்டளை சார்பில் வீடுகள் வழங்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டது.

ஞானம் அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 150 வீடுகள் கட்டி அதை பயனாளிகள் கையில் ஒப்படைக்கும் நிகழ்வு வரும் 09, 10 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. வழக்கம் போன்று ஞானம் அறக்கட்டளை நிர்வாகிகள், அரசதரப்பு பிரதிநிதிகள் மற்றும் வால்பிடிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஆகியோரை வைத்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காதே!

ஞானம் அறக்கட்டளை மற்றும் லைக்கா நிறுவனத்தின் மூலவரான சுபாசுகரன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் 2.0 திரைப்படத்தில் நடிக்கும் ரஜினியை முன்னிறுத்தி இந்த நிகழ்வை நடத்த முற்பட்டமையானது, தமிழர் தாயகத்தின் எழுச்சியை மடைமாற்றுவதற்கே. இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இயங்கியவர்கள் ரஜினி தனது ஈழப்பயணத்தை கைவிடுவதாக விடுத்த அறிவிப்பின் மூலம் அம்பலப்பட்டார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் வதைபட்டுவரும் தமிழர்களுக்காக குரல்கொடுக்காதவர்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கால நீடிப்பின் பெயரால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை எதிர்த்து கேள்வி எழுப்பாதவர்கள் நடிகரின் பயணத்தை தடுத்துவிட்டார்கள் என்பதற்காக பொங்கியெழுந்ததை வேறு எப்படி செல்வது…?

நாம் போராடுவது உரிமைக்காகவே தவிர, சலுகைகளுக்காகவோ, அனுதாபத்திற்காகவோ, ஆறுதலுக்காவோ கிடையாது!

ரஜினியின் வருகை மூலம் எமது மக்களுக்கு ஆறுதல் கிடைத்திருக்கும் என்று ஆருடம் கூறுபவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். சிங்களத்தின் கொலை நிழலில் நின்றுகொண்டே எமது உரிமைகளுக்காகவே நாம் போராடி வருகின்றோமே தவிர சலுகைகளுக்காகவும், ஆறுதலுக்காகவும், அனுதாபத்திற்காகவும் இல்லை.

ரஜினி வந்து எம்மை பார்ப்பதால் எமது துன்பங்கள், துயரங்கள் நீங்குமென்றால், அப்பேற்பட்ட அற்புத ஆற்றல் பெற்ற இறைதூதரை தமிழ்நாட்டில் வைத்தே ஜெபக்கூட்டங்களை நடத்தி தமிழக மக்களுக்கு ஆறுதலைக் கொடுக்கலாமே! இல்லையென்றால் கமலாலயத்தின் பிரதான சுவாமியாக்கி அருள்பாலிக்க வேண்டியதுதானே!

ஈழப்பயணத்தை கைவிடுவதாக அறிவித்து ரஜினி விடுத்த அறிக்கையானது அவரை பின்னிருந்து இயக்கும் சக்திகளால் தயாரிக்கப்பட்டது என்பதற்கு அவரின் செயல்பாடுகளே சாட்சி. அவருக்கு பெயர், புகழ், கௌரவம், பணம், பொருள், சொத்து ஆகியவற்றை அள்ளிவழங்கிய தமிழ்மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்…? யாரோ கட்டிக்கொடுத்த வீட்டை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்பதுதான் தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறா…?

பொய்… பொய்… அத்தனையும் பொய்!

லைக்கா நிறுவனத்தின் சார்பில் 150 வீடுகள் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டதே பொய்யெனும் செய்திகள் வந்துள்ளது. வெறும் 50 வீடுகள்தான் லைக்கா நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டதாகவும் மீதி 100 வீடுகள் இந்திய அரசின் நிதி உதவியில் கட்டப்பட்ட வீடுகள் என்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வட மாகாண முதல்வர் மதிப்பிற்குரிய விக்னேசுவரன் ஐய்யாவும் பங்கேற்பதாக செய்திகள் வெளியிடப்பட்டதையடுத்து முதல்வரது வட்டாரத்தில் அது குறித்த விசாரித்த போது குறித்த நிகழ்வில் முதல்வர் கலந்துகொள்ளமாட்டார் என்ற தகவல் கிடைத்தது. 150 வீடுகள் கட்டியதாக சொன்னதும், முதல்வர் பங்கேற்பு குறித்த செய்தியும் பொய்யென்றானது.

21 நாடுகளில் தனது தொழில் சாம்ராச்சியத்தை நடத்திக் கொண்டிருக்கும் அல்லிராசா-சுபாசுகரன் ஒருவரே போதும் முழு ஈழத்தையும் புனருத்தானம் செய்வதற்கு. அப்படி இருக்கையில் இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியில் ஒழிந்துகொண்டு ஒரு நிகழ்வை நடத்தும் அவசரம் என்னவோ…?

ரெக்கை கட்டிப் பறக்கும் ரஜினியின் அறிக்கை!

இது ஒருபக்கமிருக்க, புனிதப்போர்.. மாவீரர்கள்.. என்றெல்லாம் அறிக்கை சும்மா ரெக்கை கட்டிப்பறக்குது. யாரோ எழுதிக்கொடுத்த வசனங்களைத் தான் நான் திரையில் பேசுகிறேன் என்ற உண்மையை உங்கள் வாயலேயே சொன்னதை இந்த அறிக்கை விடயத்திலும் நாம் பொருத்திப்பார்கிறோம்.

அதைவிட, மீனவர் பிரச்சினை குறித்து மைத்திரியுடன் பேசுவதாகத் திட்டமிட்டிருந்தேன் என்று கிச்சுக்கிச்சு மூட்டப்பட்டிருந்தது. ரஜினிக்காக வக்காளத்து வாங்கும் தமிழக பாரதிய சனதா கட்சி தலைவர்கள் தம்மையறியாமலே ஒன்றை ஒப்புக்கொண்டவர்கள் ஆகிவிட்டார்கள். இதுவரை தமது தலைவர் மோடி அவர்கள் எப்பாடுபட்டேனும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்று கூறிவந்தவர்கள் இப்போது ரஜினியின் அறிக்கையை தூக்கிப்பிடிப்பதன் மூலம் மோடி கையாலாகாதவர் என்று ஒத்துக்கொள்கிறார்களா…?

ரஜினி எதிர்ப்பில் காட்டிய வேகத்தை இந்தியாவின் துரோக விடயத்தில் காட்டாத தமிழக உணர்வாளர்கள்!

ரஜினி ஈழத்திற்கு வரப்போகின்றார் என்றதும் நேரெதிர் திசையிலான இரண்டுவிதமான எதிர்வினைகள் கருக்கொண்டது. சினிமா மோகத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் மனதில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரத்தை சந்திப்பதென்ற புள்ளியில் முன்னெடுப்புகள் முளைவிட்டது. அதை முற்றிலும் தவறென்று கூறிவிட முடியாதென்ற போதிலும் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே.

ரஜினி ரசிகர்களின் எதிர்பார்பாக இவை ஒருபக்கம் இருந்தாலும் இந்த நிகழ்வில் ரஜினி பங்கேற்பதனை எதிர்க்கும் போராட்டங்கள் இன்னொரு பக்கம் திட்டமிடப்பட்டது. இந்த வேளையில்தான் தமிழீழ ஆதரவாளர்களான வைகோ, திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் ஈழப்பயணத்தை கைவிடுமாறு ரஜினியை வலியுறுத்தியிருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளை முழுமையாக ஏற்காதுவிடினும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பயணத்தை கைவிடுவதாக ரஜினியின் பெயரில் அறிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில் ரஜினியின் பயணத்தை எதிர்த்தவர்கள் போட்டி போட்டு வரவேற்றும் நன்றி தெரிவித்தும் அடுத்துவரும் நாட்களை ரஜினியை மைய்யப்படுத்தியதாக ஆக்கியிருந்தார்கள். ரஜினியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப் போன்றே நாமும் இந்த விடயத்தை பார்க்க முடியும்.

செனீவா மனித உரிமைகள் பேரவையில் இனவழிப்பு அரசாகிய சிறிலங்காவிற்கு காலநீடிப்பு வழங்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பின்றியே நிறைவேற்றப்பட்டமையானது தமிழர்களின் நீதிக்கான முன்னெடுப்புகளுக்கு பெரும் பின்னடைவாகும். இந்த அனைத்துலக அயோக்கியத் தனத்தின் பாத்திரவாளியாகத் திகழும் இந்திய அரசை சுதந்திரமாக செயற்பட அனுமதித்த கையாலாகத் தனத்தை மூடிமறைக்கும் முயற்சியாகவே இதை எம்மால் பார்க்க முடிகிறது.

புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர் செயற்பாட்டுத் தளத்தில் 33 ஆவது அமர்வு நிறைவுற்ற நாளில் இருந்தே 34 ஆவது அமர்வை நோக்கிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கப்படிருந்தது. இவ்வாறே புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர் செயற்பாட்டுத் தளம் தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. கால நீடிப்பை வழங்கும் தீர்மானம் கொண்டுவரப்படப் போகின்றது என்பது தெரிந்ததும் அனைத்துலக ரீதியில் அதை தடுப்பதற்கு ஈழத்தமிழர்கள் மேற்கொண்ட அத்தனை முன்னெடுப்புகளையும் விழலுக்கு இறைத்த நீராகியதற்கு இந்தியாவின் முண்டுகொடுப்புகளே காரணமாகும். அதற்கு வழியேற்படுத்தியது தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளின் மௌனமே.

கால நீடிப்பினை வழங்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றும் தறுவாயில்தான் தமிழ்நாட்டு தமிழ்த்தேசியத் தலைவர்கள் அறிதுயில் கலைத்தெழுந்தார்கள். தாம் வாழும் நிலப்பரப்பு வழியே தமக்கான அரசாகிய இந்திய அரசை தமிழர் விரோத செயல்பாட்டிற்கு அனுமதித்துவிட்டு தீர்மானத்தை எதிர்க்க வேண்டுமென கண்துடைப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்தமையானது இந்தியாவின் தமிழினத் துரோகத்திற்கு பட்டுக்குஞ்சமாகவே அமைந்திருந்தது. இவ்வாறான பின்னணியில் தான் ரஜினியை தடுத்து நிறுத்தி தமக்குத் தாமே ஆறுதல் தேடிக்கொண்டார்கள் இவர்கள்.

நல்லூர் வீதியில் நடந்தேறிய கோமாளித்தனம்!

தமிழக காட்சிகள் இப்படியென்றால், உதவித்திட்டத்தை பணயமாக வைத்து மக்களை நிர்பந்தத்தின் பேரில் திரட்டி நல்லூர் வீதியில் நடத்திய கோமாளித்தனம் இந்த நாடகத்தின் உச்சமாகும். ரஜினியின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்கியங்களைப் போன்றே நல்லூர் வீதியில் நிறுத்தப்பட்டவர்களின் கைகளில் தினிக்கப்பட்ட பதாகைகள் தாங்கிய வசனங்களும் சம்பந்தமே இன்றி பல்லிளித்துக் கொண்டிருந்தது.

ஈழ மண்ணுக்கு இப்படியான மக்கள் போராட்டங்கள்(?) ஒன்றும் புதிதில்லை. மகிந்த ராசபக்சேவின் ஆட்சிக்காலத்தில் அவர் தூக்கிப்போடும் எலும்புத்துண்டிற்கு வாலாட்டித்திரிந்த டக்ளசு தேவானந்தா கூட்டத்தினரால் உதவித் திட்டங்கள் வழங்கப்பட இருப்பதாக ஏமாற்றி அழைத்துவரப்பட்டவர்களை மகிந்த ஆட்சியை ஏற்று கூடிய கூட்டமாக காட்டிய கோமாளித்தனங்கள் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட நிலையில் ரஜினிக்காக லைக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் ஒன்று கூ(ட்)டல் ஆச்சிரியமான ஒன்றல்லவே.

ரஜினி வருகைப் படலத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம்!

ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதற்கான முன்னறிவிப்பாக முதல் படத்தின் இறுதிக்காட்சி அமைக்கப்படுவதைப் போன்று ரஜினிக்காக எழுதப்பட்ட அறிக்கையும் அதன் இரண்டாம் பாகத்திற்கு கட்டியம் கூறியுள்ளது. மீண்டும் ஒருதடவை ஈழத் தமிழர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அதையும் அரசியலாக்கி தடுத்துவிடாதீர்கள் என்ற வேண்டுகோளுடன் முடிவடைகிறது அந்த அறிக்கை.

அத்துடன் நிறுத்தாது நல்லூர் போராட்டத்தை(?) அங்கீகரிப்பதாக அதற்கொரு பதில் கடிதம் எழுதப்பட்டது. காலமும் நேரமும் கைகூடி வரும் போது நிச்சயம் சந்திப்போம் என்ற பதில் கடிதத்தின் மூலம் ரஜினி வருகையின் 2 ஆம் பாகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ மண்ணையும், ஈழத் தமிழ் மக்களையும் பார்த்துவிடத் துடிப்பது உண்மையானால் ரஜினி செய்யவேண்டியது என்ன…?

வட மாகாண முதல்வர் மதிப்பிற்குரிய விக்னேசுவரன் ஐய்யா அவர்களைத் தொடர்பு கொண்டு அவரது வழிகாட்டுதலில் உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள். வட மாகாணத்திற்கு வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கடைப்பிடிக்கும் வழக்கம் இதுவே.

அண்மையில் ஈழப்பகுதிக்கு வந்திருந்த கனடா ரொரன்ரோ மேயர் கூட முதல்வரின் வழிகாட்டுதலில்தான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று இனவழிப்பு செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு வணக்கம் செலுத்தியதுடன் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்களையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள் உலவிய இட்டத்தை பார்க்கவும் அவர்களது மூச்சுக் காற்று கலந்திருக்கும் மண்ணை தரிசிக்கவும் விரும்பியது உண்மையாக இருந்தால் செய்ய வேண்டியது என்ன…?

உலகில் எந்த விடுதலைப் போராட்ட இயக்கங்கள் செய்யாத, ஏன் எந்தவொரு உலக நாடும் செய்யாத அருஞ்செயலை எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்து காட்டினார்கள். ஆம், தேச விடுதலைக்காக தமது உடல், பொருள், ஆவியை உவந்தளித்த மாவீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மாவீரர் துயிலும் இல்லங்களை அமைத்திருந்தார்கள். பழந்தமிழர் நாகரிகத்தின் தொடர்ச்சியாக தமிழீழத்தில் 27 மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

சிங்கள கொலைவெறிப்படைகள் மண்ணுறங்கும் மாவீரர்களைக் கூட நிம்மதியாக தூங்கவிடாது கிண்டிக் கிழறி எறிந்தார்கள். இவ்வாறு பல துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியவை புதர்மண்டிப்போயுள்ளது. கிளிநொச்சி கனகபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லம் உள்ளிட்ட சில மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த மாவீரர் நாளை முன்னிட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் மக்கள் ஒன்றுகூடி சுடரேற்றி, மாலையணிவித்ததுடன் தமது கண்ணீரால் ஆராதனை செய்து அங்கு மண்ணுறங்கும் மாவீரர்களின் ஆன்மாக்களை குளிர்வித்துள்ளார்கள்.

உங்கள் தமிழீழத்திற்கான பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் முதலாவது நிகழ்வாக கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று தமது தாய் மண் விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்வதாக அறிவியுங்கள்.

அடுத்து, இந்த நூற்றாண்டின் மாபெரும் இன அழிப்பு நடந்தேறிய மண்ணான முள்ளிவாய்க்காலுக்கு செல்லவேண்டும்.

உலகம் கண்டிராத விடுதலைப் போராளியாகவும் உலகத் தமிழர்களுக்கு தலைநிமிர்வைக் கொடுத்தவராகவும் திகழும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மண்ணை மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழ் இளைஞர், யுவதிகளின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

மக்களை ஓரிடத்தில் கூட்டும் நிகழ்வைத் தவிர்த்து எமது மக்களை நேரடியாக சந்தியுங்கள். அவர்களின் உள்ளக்கிடக்கையை நேரடியாக உங்கள் செவிவழிகாகவே கேளுங்கள். அவர்களின் கந்தலான வாழ்வை நேரிடையாகவே உங்கள் கண்களால் பாருங்கள். உள்ளதை உள்ளபடி உலகுக்கு உரையுங்கள். முதலில் உங்கள் பாரத தேசத்து மக்களிடம் நீங்கள் நேரடியாகவே அவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

மூடி மறைத்து சாகசப்பயணம் வந்து உலோக வல்லூறுகளில் பறந்து பறந்து திரியாது, இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்தே நீங்கள் ஈழத்திற்கு வரவேண்டும். சிங்கள, இந்திய அரசுகள் தடுக்குமாயின் அதையும் துணிவோடு அம்பலப்படுத்த வேண்டும். உண்மையில் ஈழத் தமிழ் மக்களாகிய எங்களுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் இதையே செய்யுங்கள். இதை மட்டுமே செய்யுங்கள். அதுவே போதும்.

உங்கள் அறிக்கையில் இடம்பெற்ற வார்த்தைகள் உங்களுடையதாகவே இருந்தால் மேற்கூறிய நிகழ்ச்சி நிரலின் அடிபடையில் ஈழம் நோக்கிய உங்கள் பயணத்தை தாராளமாக இன்றே அறிவியுங்கள். எவரொருவரும் உங்கள் பயணத்திற்கு குறுக்கே வரப்போவதில்லை. அதை விடுத்து லைக்கா நிறுவனத்தின் முதுகில் சவாரி செய்ய நினைத்தால் இப்படித்தான் ஆகும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

-இரா.மயூதரன்