அப்போதைய தோல்வி இப்போது வெற்றி..! – வீரத்தமிழன் இறக்கவில்லை விதைக்கப்பட்டுள்ளான் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

அப்போதைய தோல்வி இப்போது வெற்றி..! – வீரத்தமிழன் இறக்கவில்லை விதைக்கப்பட்டுள்ளான்


வரலாற்று ஆவணங்களை சற்று ஒப்பிட்டு அதில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் கூட அது சில வேளைகளில் மாற்றம் அல்லது திரிபு படுத்தப்பட்ட விடயம் எனக் கூறும் பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
காரணம் வரலாற்றின் மறுபக்கம் தெரியாத சிலர் அல்ல பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள். இப்போது நீங்கள் படிக்க ஆரம்பித்திருக்கும் விடயம், தெரிந்த கதை தான் அத்தோடு தெரியாத பக்கத்தையும் காட்டும் நாளைய தேவையையும் கூறும் என்பது உறுதி.
ஒரு சமூகத்தின் போராட்டம், ஒரு இனத்தின் போராட்டம் ஒடுக்கப்பட்டு போவது போராட்டத்தை முன்னெடுக்கும் இனத்தினரிடையே இருக்கும் அறியாமையால்.
வரலாற்றினை முறையாக அறியாத ஓர் இனம் அந்த அறியாமை காரணமாகவே சிதையும் என்பது அறிந்ததோர் விடயமே.
இப்போது திருகோணமலை அமெரிக்காவிற்கு போய் விட்டது, அம்பாந்தோட்டை அந்நியன் சொத்து என வெட்டிப்பேச்சு பேசுகின்றவர்களுக்கு அப்போது அதனை காக்க செய்த போராட்டத்தை அறிவார்களா?
வீரம் என்பது மனதில் அல்ல மண்ணிலும் விதைக்கப்பட்டது, என்பது போல வீர மண்ணின் புதல்வன் மன்னன் பண்டார வன்னியன் பற்றி சற்று அறிந்தால் தமிழர் பூமிதனில் தமிழர் தம் சிறப்பு தெரியும்.
நுனி நாக்கில் ஆங்கிலத்தோடு “வாவ்” என்று சொல்லும் வெட்டித் தமிழனின் இமைகளையும் விரிவடைய வைக்கும் அந்த வன்னியனின் வீரம்.
பலருக்கு தெரிந்த கதைதான் இது ஆனால் தமிழர் வரலாற்று மாறிப்போக தமிழனே காரணம் அவனது காட்டிக்கொடுக்கும் வல்லமை அந்நியனும் கூட தமிழனிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முல்லைத்தீவு தொடக்கம் வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆண்டு வந்தான் பண்டார வன்னியன். மற்றவர்களை நம்பாத காரணமே தெரியாது தனது சகோதரர்களுக்கே முக்கிய பதவிகளை கொடுத்திருந்தான்.
இங்கு இன்னொருவன் சொல்லித்தான் தமிழர் பெருமை உலகுக்கு இப்போது சென்று கொண்டிருக்கின்றது. இது ஒன்றும் புதிதல்ல அப்போதே தொடங்கிவிட்டது என்பதையும் நினைவு கூறுகின்றேன்.
ஒல்லாந்தர் இலங்கைத் தீவை கைப்பற்ற வந்த போது அவர்களின் குறிப்புகளே பண்டார வன்னியன் பெருமையையும் அப்போதைய தமிழர் ஆட்சியின் சிறப்பையும் கூறுவதாய் அமைந்து போனது.
அது சரி தமிழரின் ஆவணங்கள் எப்போதும் பாதுகாப்பதில் தமிழரை விடவும் அந்நியருக்கே ஆர்வம் அதிகம். அதற்கு காரணம் தமிழரின் சிறப்பே தவிர வேறெதும் இல்லை என்பது உறுதி.
அப்போது மேலைத்தேயர்கள் இலங்கை தீவை கைப்பற்ற காரணம் மண், கடல் வளங்கள், வணிகம் போன்றதே. எமக்கு இல்லாதது எப்படி உங்களுக்கு? அதிகாரம் வளத்தின் மீதான மோகம் போன்றதே.
அதிலும் கூட இலங்கைக்கு இயற்கை கொடுத்த வரமான ஒட்டு மொத்த ஆசியக்கண்டத்தின் திறவுகோலான திருகோணமலை துறைமுகம் பிரச்சனைகளின் அடி எனலாம் மாதோட்டம் துறைமுகமும் இதில் அடக்கம்.
புவியியலாளர் தொலமி இலங்கையில் தமிழர் வாழ்ந்த பூமியை தனியாக காட்டி தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது மட்டுமல்லாமல் வேறு எந்த இனம் வாழ வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மற்றைய பேரரசுகள் பல திருகோணமலைக்கு ஆக போரிட்டு போரிட்டு தோல்வியடைந்து மடிந்து போயின. தனித்து சிறப்பாக இருந்தான் பண்டார வன்னியன்.
ராபர்ட் நொக்ல்ஸ் என்பவன் கண்டிய மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் பெரிய சண்டைப் நடைபெற்ற போது இருந்த ஆங்கிலேய மன்னன்.
ராபர்ட் நொக்ல்ஸ்யை கண்டிய மன்னன் இப்போதைய மூதூரில் வைத்து சிறைபிடித்தான். பல வருடங்கள் சிறை வாசம் அனுபவித்த அவன் அங்கிருந்து தப்பி அநுராதபுரத்திற்கு ஓடிவிட்டான்.
அனுராதபுரத்தையும் அங்குள்ள மக்களையும் சிறப்பு மிகு ஆட்சியையும் கண்ட அவன் வியந்து போனான். அப்போது அநுராதபுரத்தை ஆண்டவன் கைலாய வன்னியன் இவன் பண்டார வன்னியன் தம்பி.
கண்டிய அரசனுக்கு படியாது ஆங்கிலேயருக்கு திரை வரி செலுத்தாது திமிர் மிக்க ஆட்சி செலுத்தி வந்தவன் தான் மாவீரன் பண்டாரவன்னியன். இந்த திமிர் வீரத்தால் வந்தது ஆணவம் அல்ல.
பண்டாரவன்னியனுக்கு நளாயினி என்ற சகோதரியும் இருந்தாள். அவள் அரச அவை புலவர் மீது காதல் கொண்டிருந்தாள்.
இன்னொரு நிலப்பகுதி மன்னன் காக்கை வன்னியன் நளாயினி மீது காதல் கொண்டு பண்டாரவன்னியனுக்கு மனப்பேச்சு கடிதங்களை அனுப்பியிருந்தான். பண்டாரவன்னியனியனிடம் இருந்து பதில் இல்லை.
இது இவ்வாறிருக்க அவைப் புலவரும் நளாயினியும் கொண்ட காதலை கண்ட காக்கை வன்னியன் மனம் புலுங்கினான். அவைப் புலவருடன் போரிட்டு வென்று நளாயினியை மணக்கலாம் என மனக்கனவு கண்ட அவன் புலவரை போருக்கு அழைத்தான்.
புலவன் வெரும் புலவனல்ல வீர மண்ணின் மைந்தன் அவன் காக்கை மன்னனை வாற்போரில் வென்று திருப்பி அனுப்பினான். இந்த போரினால் புலவனும் அரச குலமே என்று அறிந்த பண்டார வன்னியன் சகோதரியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினான்.
இந்த வஞ்சம் நஞ்சாக பதிந்தது காக்கை வன்னியன் மனதில். அப்போது வெள்ளையர்கள் பண்டாரவன்னியன் மீது படை எடுத்து தோல்வி அடைவதை கண்டான்.
மனதில் வஞ்சம் நஞ்சாக இருக்கும் போது தமிழராக இருந்தால் என்ன எவனாக இருந்தால் என்ன காக்கை மன்னன் வெள்ளையர்களுடன் சேர்ந்து சதி செய்து பண்டார வன்னியனை கொல்ல திட்டமிட்டான்.
எப்படி தமிழ் 20ஆயிரம் வருடம் பழமையோ அதைப்போலவே துரோகமும் பழையது தான். காக்கை மன்னன் மன்னிப்பு நாடகம் அரங்கேற்றி தக்க தருணத்தில் பண்டார வன்னியனை ஆங்கிலேயரிடம் சிக்க வைத்தான்.
பலமுறை படை எடுத்தும் வெல்ல முடியாத அவனை நிறைவில் ஆங்கிலேய தளபதி ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் தாக்கி வென்றனர். பின்னர் அவனுக்கு ஆங்கிலேய தளபதியாலே சிலை வைக்கப்பட்டது .
வீரத்தமிழன் பண்டார வன்னியனுக்கு மட்டுமே அவன் எதிரியான ஆங்கிலேயரே சிலை வைத்து பெருமைப்படுத்தப்பட்டான் என்பது மற்றுமோர் பெருமைப்பட வேண்டிய சிறப்பு.
1803களில் அப்போது ஒட்டுசுட்டான் பகுதியாகவிருந்த தற்போதைய கற்சிலைமடுப்பகுதியில் ஆங்கிலேய படைத்தளபதி கப்டன் றிபேக் என்பவனால் பண்டார வன்னியன் கொலை செய்யப்பட்டார்.
இப்பொழுதும் கூட பண்டாரவன்னியனை கொலை செய்த ஆங்கிலேயராலேயே வைக்கப்பட்ட நினைவு கலை. சிலர் உடைத்து விட்டனர். இலங்கை அரசே பண்டாரவன்னியனை தேசிய வீரனாக அறிவித்துள்ளனர் நிலையில் சிலர் செய்துள்ள வேலையை தொல் பொருள் கூக்குரல்கள் தட்டிக்கேட்க வில்லையா?
அப்போது தோல்வியடைந்த வெள்ளையனுக்கு இப்போது திருகோணமலை செல்கின்றதா? அடுத்தடுத்து தோற்று வந்த வெள்ளையர்களுக்கு இப்போது இடம் கொடுப்பது யார்? இதற்கு விடையில்லை.
ரார்பர் நொக்ஸ் தன் குறிப்பேட்டில் தான் வடக்காக தப்பிச்சென்ற போது அங்குள்ள மக்கள் தமிழைத் தவிர வேரு மொழிகளை பேச வில்லை என்றும்,
கைலாய வன்னியன் ஆட்சிசெய்த நாட்டை யைலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாகவும் ரார்பர் தன் குறிப்பில் பதித்துள்ளார்.
ஆகமொத்தம் இந்த வரலாறு கதை அல்ல. இதன் மூலம் தெளிவாவது தமிழர் வரலாறு மாற்றமடைகின்றது, தமிழர் பெருமை கூறும் வரலாறுகள் அழிக்கப்படுகின்றது திரிபு அடைகின்றது என்பதே.
அனைத்தையும் விட காட்டிக்கொடுக்கும் குணம் தமிழோடு பயணம் செய்கின்றது, அதன் பரிசு அழிவும் மரணமுமே என்பதும் கூட தெளிவாகின்றது.
அப்போது பண்டார வன்னியனை ஓர் தமிழன் காட்டிக்கொடுக்கா விட்டால் இப்போது வரலாற்றிலே கூட சில மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
எப்படியோ அபிவிருத்திற்காக அல்லது நாட்டு வளர்ச்சிற்காக இலங்கையில் அந்திய ஆதிக்கம் மீண்டும் தலை தூக்குகின்றது.
இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன? எமது தேவை என்ன என்பதை நினைத்து எம் பாரம்பரியத்தை காக்க வேண்டியது அந்த அந்த இனத்தின் தேவை.
எந்தவொரு வரலாற்றையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். இப்போதைய தேவை எந்த இனம் எந்த மதம் எந்த மொழி என்பதல்ல அந்தந்த வரலாற்றை காக்க வேண்டியது அவரவர் கடமை மட்டுமே.
ஆக மொத்தம் அப்போது வெள்ளையர்களின் தோல்வி இப்போது வெற்றி பெற்று வருகின்றது என்றே கூறவேண்டும். அந்த வகையில் வீரத்தமிழன் பெருமை இறக்கவில்லை விதைக்கப்பட்டுள்ளான் அதனை காக்க வேண்டியது நாளைய சமுதாயத்தின் கடமை.