நாம் எத்தனை பேர் செத்து வீழ்ந்தாலும் ஈழ விடுதலை தத்துவங்கள் இன்னும் செத்து வில்லை. உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்கள்.
– ஈழத்து நிலவன் –
ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாற்றம் கொள்ளகிறது.
வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்தவரையில் நல்லிணக்கம் என்ற சொல் இன, நில ஒடுக்குமுறையின் கோரத்தின் அர்தத்தை தருகிறது.நமது தமிழரின் தேசிய தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்ற வடக்கு-கிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம். சலுகைகளுக்காக எமது உரிமைகளை நாம் இழப்பதானது அவல நிலைக்கே எம்மை இட்டு செல்லும்..
மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திரு. ஒன்று ஆயுதப்போர் நடத்து அல்லது உளவியல் போர் நடத்து.
எவனும் சிந்திக்கவே கூடாது. இதுவே இன்றைய உலக மற்றும் உள்ளூர் அரசியல்.
ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையின் வெளிப்பாடாக நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தடைக்கல்லாகும். தற்போது அதில் திருத்தங்கள் செய்வதாக உலகத்தை ஏமாற்றும் சிங்கள அரசு எப்பாடு பட்டேனும் அந்த நாடகத்தை வெற்றிகரமாக மேடையேற்றிவிடத் துடிக்கின்றது. அதற்கு சிங்களத்தின் சதி வலையில் சிக்கிய சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் சம்பந்தன்-சுமந்திரன் போன்ற மக்கள் பெருவிருப்பை பிரதிபலிக்காகதவர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்துவருகின்றனர்.
கிழக்கில் நடைபெற உள்ள மக்கள் எழுச்சி எழுக தமிழ் நிகழ்வை குழப்ப ஆளுமையில்லாகூட்ட்டமைப்பும் (TNA ) கட்சிசார்ந்த பச்சோந்திகள் திரைமறைவில் செயற்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது. அனைத்து தமிழ் பேசும் உறவுகளே கட்சி பேதமின்றி தமிழ் பேசும் மக்களால் காலத்தின் தேவைகருதி நடக்க உள்ள மக்கள் எழுச்சி எழுக தமிழ் நிகழ்வை பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சி மிக்க குரலாக ஓங்கி ஒலிக்க ஆதரவை வழங்குங்கள்.
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியை மட்டக்களப்பில் உசுப்பேற்றி எழுக தமிழ் மக்கள் எழுச்சியை குழப்பும் நோக்குடன் கருணாவின் விசுவாசியும் தற்போதைய தமிழரசுக் கட்சியின் ஏவலாளியும்மான நவா நவநீதன் என்பவர் தலைமையில் இலங்கை புலனாய்வுப்பிரிவின் பின்னணியுடன் களம் இறக்கப்பட்டுள்ளனர். வரலாறு தற்போதைய தலைவர்களை மட்டும்மல்ல அவர்களின் முந்தைய தலைவர்களையும் ஏளனமாகவே பார்க்கும் இவ்விரு தலைமைகளின் தன்னிச்சையான செயல்பாட்டால்.
தேசிய தலைவரையும் போராளிகளையும் பயங்கரவாதிகளென நிலத்திலும், புலத்திலும் அரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்தவர்கள், தமிழர்கள் வாழ்வு சிதைந்து கிடக்க தம் வாழ்வை மேம்படுத்துபவர்கள், வாக்களித்த மக்களின் நலன் பற்றி கவலை இன்றி சிங்கள அரசுகளின் நலன்களுக்கமைய செயல்படுகின்றவர்களுக்கு
தமிழ் மக்களின் பாமரத் தனத்தில் தனது எசமான விசுவாசத்தை அரங்கேற்றத் துடிப்பது துரோகமில்லையா…?
பதவியின் சொகுசில் மக்களின் அவலங்களை மறந்து போகும் இவர்களால் இனியும் பயன் என்ன என தமிழினம் சிந்திக்க வேண்டும்.
தமிழர்கள் இப்போது இவர்களை சரியாக இனம் காணாது விட்டால் தேசிய உணர்வு கொண்டு போராட துணிந்து எழுகை கொண்ட மக்கள் சக்தியின் எழுச்சி மீண்டும் இவர்களால் ஆதிக்க அரசுக்கு அடமானமாகி முடமாவதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது போகும்.
ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன. மக்கள் போராட்டம் அனைத்தையும் வென்று போராடும்.
வெறுமனே தம்மால்தான் எல்லாம் நிகழ்ந்ததாக தமது எதிர்கால அரசியல் “ கொள்கைகளை ”கருத்தில்வைத்து தமது பித்துப்பிடித்த கருத்துக்களை மக்கள்மத்தியில் பரப்பிவருகின்றார்கள். சம்மந்தரும்,சுமந்திரனும் தமது அரசியல் பித்தலாட்டத்திற்கு உண்மையான எமது இலட்சியத்தை குழிதோண்டிப் புதைப்பது மட்டுமல்லாமல் இந்த இனத்திற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் அர்த்தமற்றதொன்றாக மாற்றிவருவதையும் நாம் அவதானிக்கமுடிகின்றது.
கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும். ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் சம்பந்தன், சுமந்திரன்,மாவை போன்றவர்களும், இந்திய வல்லாதிக்கமும் இன்றும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.
“ விடுதலைக்காகப் போராடும் எந்த ஒரு இனமும் அவ்வின அடிமட்ட மக்களை அத்திவாரமாக வைத்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தனியார்களும், தரகர்களும் தகுந்த ஒரு தீர்வைப் பெற்றுத் தரமாட்டார்கள் ”
இன்று எமது இனத்திற்கு என்னென்ன நல்லவைகள் எல்லாம் நடக்கின்றதோ அவை அனைத்தும் எமது மாவீரர்களின்பாலும், அவர்களின் உயிர்தியாகத்தின்பாலும்தான் என்பதை இந்த பித்தர்களால் இதயசுத்தியுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இன்றைய அனைத்து அரசியல் மாற்றத்திற்கும் முப்பது ஆண்டுகால போர்தான் அடிப்படை காரணம் என்பதைக்கூட இந்தப் பித்தர்கள் இன்று மறுதலித்துவருகின்றார்கள்.
ஆகவே இனியும் விடுதலைப் புலிகளின்பால் எம் மக்களிடம் இருந்து வாக்கினை சூறையாடி அவர்களையும் அவர்களின் தியாகங்களையும் மழுங்கடிக்கும் இந்த நயவஞ்சக துரோகிகளை நாம் ஆதரித்து மேடையேற்றினால் எமக்கு நாமே மண்ணை எம் தலையில் வாரி இறைப்பதற்கு சமமாகிவிடும்.
‘மகாவம்ச மனநிலை’ச் சிங்கள அரசுகள் காலத்தை இழுத்து அடித்து தமிழர்களை ஏமாற்றி விடவே சித்தம் கொண்டுள்ளது.
2015 ஜனவரி மாதம் முதல் இன்று வரை நல்லாட்சி அரசாங்கம் முந்தைய அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்பதை பல நடை முறைகளுக்கு ஊடாக நிரூபித்து இருக்கிறது. தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல சிங்களவர்கள் கூட உரிமைகளைப் பெற்று விடவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்த அரசை நம்புங்கள் எல்லாம் நடக்கும் என வாக்களித்த மக்கள் நம்ப வைக்கப்படுவதும், புலம்பெயர் மக்கள் மூளைச் சலவை செய்யப்படுவதும், பாதிக்கபட்ட மக்களுக்கு நீதி தொடர்ந்து மறுக்கப்படுவதும், சிறி லங்கா அரசுடன் ஒரு இணக்கப்பாட்டைக் கடைப் பிடிப்பதும் மற்றவர்களின் முன்னெடுப்புக்களை விமர்சனத்துடன் பலவீனப்படுத்துவதும், சுய விமர்சனம் என்ற பெயரில் அடிப்படை, அன்றாடப்பிரச்சினைகளை திசை திருப்புவதும் ஒரு ஏமாற்றும் துரோகமும் இல்லையா…???
எப்பொழுதெல்லாம் மக்களுக்கான போராட்டத்திற்கான தேவைகள் எழுகின்றனவோ அப்பொழுதெல்லாம் மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. போராடும் மக்கள் எப்படி போராட வேண்டும் என்பதை போராடும் மக்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. போராட்டத்தின் தேவையை உருவாக்கும் ஒடுக்குமுறையாளர்களின் செயல்களுமே தீர்மானிக்கின்றன. எப்பொழுதும் நீதி தோற்றுப் போவது போல் தோற்றமளிக்கலாம். அதே போல் அநீதி வெல்வது போலும் தோன்றலாம். ஆனால் எப்பொழுதுமே இறுதியில் நீதிக்கே இறுதி வெற்றி.
ஆனால் மக்கள் போராட்டம் அனைத்தையும் வென்று போராடும் வல்லமை கொண்டது. வலிகளே மக்களை வலிமை கொண்டு போராட வைக்கின்றன. ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு நீர் வார்க்கின்றன. மக்கள் சக்தியின் முன் எந்த சக்தியும் வெற்றி பெற முடியாது
முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர்களை வீழ்த்தியது ஆனால் விடுதலை வேட்கையைப் பறிக்க அதனால் முடியவில்லை. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் இளைக்கப்பட்ட கொடூரங்களை உலகம் இன்னும் மறக்கவில்லை. சில உலக நாடுகள் சிங்கள தேசம் நடத்திய போருக்கு தூண்டு கருவியாக இருந்தன.
சிங்கள தேசமும் தமிழீழமும் பொருதிய சமச்சீரான போராக அது அமையவில்லை. தனியே இரு நாடுகளும் மோதி இருந்திருப்பின் போரின் முடிவு தமிழினத்திற்குச் சார்பாக இருந்திருக்கும். இதை உலக நாடுகள் விரும்பவில்லை.
அயல் நாடு ஆயுத உதவி, ஆளணி உதவி, வேவுத் தகவல், இராசதந்திர அனுசரணை, போர் நிறுத்தம் ஏற்படாமல் பார்த்தல் போன்ற உதவிகளை வலிந்து வழங்கியது. உலகத் தமிழர்களின் தலைவர் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிய முன்னாள் தமிழக முதல்வர் ஈழத் தமிழினப் படுகொலைக்கு ஆதரவு வழங்கினார்.
மொழி, இனம், தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசியவர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது கழுத்தைத் திருப்பிக் கொண்டார்கள். சொந்தச் சகோதரர்கள் இறப்பது கண்டு இரங்காதவர்கள் இப்போது தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு பற்றிப் பேசுகின்றனர். அது போதாதென்று தமிழீழம் நிறுவும் நோக்குடன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி செயற்பட்டதாகவும் அவர் உயிர் வாழ்ந்திருந்தால் நிட்சயம் தமிழீழம் நிறுவப்பட்டிருக்கும் என்ற ஆதரமற்ற வரலாற்றுப் புனைசுருட்டை கருணாநிதி அறிக்கை இட்டுள்ளார்.
இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர். போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பெயரால் பல ஆண்டுகளாக நீதி விசாரணைகள் மறுக்கப்பட்டு சிறைக்கூடங்களுக்குள் முடமாக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் இருண்டதாகவே தொடர்கின்றது.
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழ் இனவழிப்பானது வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தற்போதைய நல்லாட்சி அரசும் தொடர்ந்து வருகிறது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.
நமது அடயாளங்கள் அழிக்கப்படும் போது…தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது…
தமக்கான அதிகாரம் ஒடுக்கும் போது…தனது இனத்தின் உரிமை,சமத்துவத்திற்காக
ஒரே நோக்குடன் செல்லும் பாதையே போராட்டம்…
தமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள – பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கை வகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும்.
மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணாகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும்.
அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.
ஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும்.
நீண்டதாகத் தொடரும் எமது விடுதலைப் பயணத்தில், நாம் பல நெருப்பு ஆறுகளை நீந்திக் கடந்துள்ளோம். இந்த அக்கினிப் பிரவேசத்தில் நாம் அழிந்து போகாமல் நிலைத்து நிற்பதற்கு, எமது இலர்சிய உறுதிதான் காரணம். அடக்குமுறைக்கு அளாகி, இன் அழிவைச் சந்தித்து நிற்கும் எமது மக்களுக்கு, தன்னாட்சி கோரி நாம் வரித்துக்கொண்ட இலட்சியம் நேரானது, சரியானது, நியாயமனது. அன்றிலிருந்து இன்றுவரை நாம் எமது கொள்கையை உறுதியாகப் பற்றி நிற்கிறோம். எமது இலட்சியமே எமது மலையான பலம். அந்த மலையான பலத்தில் நாம் நிலையாக நிற்பதால்தான், எமது இயக்கத்திற்கு ஒரு தனித்துவமும், முக்கியத்துவமும், சிறப்பான சரித்திரமும் உண்டு. தமிழீழத்தில் அதிர்ந்த அரசியற் பூகம்பங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், எனைய தமிழ்க் குழுக்களின் இலட்சியக் கோட்டைகள் தகர்ந்து போயின. எமது உறுதியை மட்டும் எந்தவொரு சக்தியாலும் உடைத்துவிட முடியவில்லை.
– தமிழீழத் தேசியத்தலைலவர் திரு.பிரபாகரன் -1996 –
எமக்கு நடந்த அநீதியை, இன அழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று.
பிறப்பும் இறப்பும் கடந்து வரலாற்றின் பக்கங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் போராளிகள்.
மரணம் பலரைப் புதைக்கின்றது சிலரை தான் விதைக்கின்றது இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
“தற்காத்துக் கொள்வதற்காக பகைவனிடம் தனது இலட்சியத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் சுற்றி வளைத்துச் சொல்வதோ அல்லது மறைத்துப் பேசுவதோ சந்தர்ப்பவாதத்தின் தொடக்கம்”
ஒரு நாள் எங்களுக்கான தேசங்கள் பிறக்கும் !..
தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே. இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள வேண்டும். தமிழக தமிழீழ மக்களின் அடிமை நிலை உடைக்க தமிழர்காக குரல் கொடு.
ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலக தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும்.
நாம் எத்தனை பேர் செத்து வீழ்ந்தாலும் ஈழ விடுதலை தத்துவங்கள் இன்னும் செத்து வில்லை இன்னும் வீரியத்தோடு தமிழ்த் தேசிய விடுதலை கிட்டும்வரைக்கும் பயணித்துக்கொண்டுதான் இருக்கும்.
– ஈழத்து நிலவன்