பொருள் விற்பனையாளர் போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரந்தனையில் கொள்ளையடித்துக் கொண்டு, யாழ் நகருக்கு தப்பிச் சென்ற இரண்டு இந்திய கொள்ளையர்களையும் பொலிசார் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் நாரந்தனை பகுதிகளில் அண்மைக்காலமாக மேற்குறித்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மண்டைத்தீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பொலிஸார் பலப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற இரு இந்திய பிரஜைகள் வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றிருந்தனர்.
உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் மண்டைத்தீவு பொலிஸ் காவல் அரணுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர். இதனடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனையின் படி செயற்பட்ட பொலிசார், கொள்ளையடித்த நகைகள், பொருட்களுடன் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச்சென்ற இரு இந்தியபிரஜைகளையும் துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர். அவர்கள் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், கடவுள் விக்கிரகங்கள், இந்திய நாணயங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் விஸ்தீரணத்துக்கேற்ப பொலிஸாரின் ஆளணி வளம் பொதுமானதாக இல்லாமையே இந்த பகுதியில் பல சமூகவிரோதச் செயற்பாடுகள் அதிகரிக்கக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தமிழகத்தினைச் சேர்ந்த சரளமாக தமிழ் பேசக் கூடிய தமிழர்கள் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்து.
இதேவேளை யுத்தத்தின் பின்னர் தமிழகத்தில் இருந்து தாயகத்திற்கு வரும் வியாபாரிகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக வியாபார நடவடிக்கைகளுக்காக இவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களை குறிப்பாக யாழ் குடாநாட்டு மக்களை குறிவைத்து வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் ஆடை வியாபாரத்திற்காகவே அதிகளவில் வருகின்றனர்.
யாழில் வீடு வீடாக சென்று ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு வருபவர்களை மக்கள் சந்தேக கண்ணோடு பார்க்காமல் வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று ஆடைகளை வாங்குகின்றனர். இவ்வாறு வியாபார நடவடிக்கைகளுக்காக வருகின்றவர்கள் வீடுகளை நோட்டமிட்டுவிட்டு ஒரு சில பேர் திரும்ப கொள்ளையடிப்பதற்காக வருகின்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
எனவே இவ்வாறு வியாபார நடவடிக்கைகளுக்காக வீடுகளிற்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.