வலி சுமந்த எட்டாம் ஆண்டு! கவிஞர் மதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

வலி சுமந்த எட்டாம் ஆண்டு! கவிஞர் மதி


வெட்ட வெளி நிலம் தனிலே
வெட்ட வெட்டக் களமாடிய இனம்
வெற்றி அல்லது வீரமரணம்
ஒன்றே பேச்சு!

எது வரினும் வரட்டும் மூச்சு
முட்டும் கூட்ட நெரிசலுக்குள்
கொட்டியது குண்டு மழை
பாய்ந்தது குருதி வெள்ளம்
அத்தனையும் கடந்தோம் ஆண்டுகளோ
எட்டாச்சு! உலகமோ காலத்தை
இன்னும் கடத்துவதேன்?

இனப்படுகொலை ஒன்றை நிகழ்த்தி விட்டு;
களைப்புத்தீர உலகம் இளைப்பாறிக்
கொண்டிருக்கிறது கொன்ற களை
கொலையாளிகளுக்கும் உண்டு போல…

தனியொருவன் கொல்லப்பட்டாலே
கைது சிறை விசாரணை நீதிமன்றம்
தீர்ப்பு என ஏராளம் விதியுண்டு!

கூட்டுப்படுகொலை அதுவும்
வெட்ட வெளியில் உலகின்
ஆசீர்வாதத்துடன் நடந்தேறி
ஆண்டுகள் எட்டாச்சு…

கொலையாளி தலை நிமிர்த்தி
உலகை வலம் செய்கிறான்
வெள்ளை வேட்டியுடன்…



எல்லா வலிகளில் இருந்தும்
விடுதலை பெற்று மானத்தோடு
வாழக் கேட்டது தப்பா?

வேலியை நம்பிய பயிர்கள்
கழுத்தறுக்கப்பட்டது போல்
உலகின் மூத்த குடிகள் திணறிக்
கொண்டு இருக்கிறதே இன்றும்!

ஆண்டாண்டு காலமாய் கூக்குரலிடுகிறோம்
ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா. சபை
சர்வதேச நீதி மன்றமென கண் முன்னே
சாட்சியாய் நிற்கிறோம்

நீலக் கண்ணாடிக் கட்டடங்களுக்குள்
கறுப்புக் கண்ணாடிகளை அணிந்து
பாரா முகங்களாய் கேளாச் செவிகளாய்
இயங்குவதேன் உலகம்?

தேர்க்காலில் தெரியாமல் பச்சிளம் கன்று
இறந்ததற்கே அதே தேர்க்காலில் தன்
மகனையும் கொன்று அதே வலியையும்
வேதனையையும் தான் அநுபவித்து

பசுவுக்கே நீதி பகன்ற சோழ மரபில்
வந்த ஈழத்தமிழினம் கூண்டோடு அழிக்கப்பட்டு
ஆண்டுகள் எட்டாச்சு! உலகே உனக்கென்னாச்சு?
வெட்ட வெளிச்சமாய் தெரிகிறதே
இது ஓரு திட்டமிட்ட இனப்படுகொலையென
தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளால்
துடைத்தெறியப்பட்டது ஓர் இனம்

நச்சுவாயுக் குண்டுகளால் மூச்சுத் திணறி
உடல் கருகிக் கிடந்தோரே சாட்சி! உலகே
எங்கே போனது உன் மனச்சாட்சி!
கோரமாய்க் கிழிக்கப்பட்ட ஏராளம்
பாலகரின் உடல்களே ஆதாரம்

விடுதலை கேட்போரின் உள உறுதியை
முடக்குவதற்கு பாலகரையும் பயங்கரவாதப்
பட்டியலில் அடக்குவது என்ன கொடுமை இது!

விழித்துக் கொண்டு தான் இருக்கிறான்
உலகத் தமிழன்! அழித்து விட்டதாய்
நினைக்கிறான் தமிழின் பகைவன்!

பன்மொழி ஆற்றல் ஊற்றெனப்
பொங்கும் இளையோரே எழுக!
உன்மொழி உன்னினம் உலகின்
மூலம் என மொழிக!

உன் இனத்திற்கு நேர்ந்த பேரவலம் துடை
தன் மானத் தமிழுக்கு வரும் தடை
எல்லாம் உடை!



முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை தான்
நடந்ததென நிறுவு! கிள்ளுக் கீரையென
எள்ளி நகையாடும் உன் எதிரியை
சர்வதேச நீதிமன்றில் நிறுத்த உன்
ஆளுமை அத்தனையும் கொண்டு உறுமு!

கூண்டுக்குள் ஏற்று! ஆண்ட உன்
இனத்தின் அழுகையை ஆற்று! பாராண்ட
முந்தையர் உன் தந்தையர் எனப் போற்று!

உன் சீராண்ட தோள்கள் வீரத்தின் ஊற்று!
நீயோ சுதந்திரக் கண்ணிகளின் நாற்று! நாளை
நிரந்தரமாய் சுவாசிக்க வேண்டும்
சுதந்திரக் காற்று!

புத்தபெருமானை வணங்குவோரே!
கொல்லாமை என்கிறது பௌத்தம்
சித்ததம் துடிக்கத் துடிக்க இரத்தம்
சிந்தச் சிந்த ஏதுமறியா அப்பாவிகளை
கொன்றொழித்த மாபாவிகளே!

குறிக்கோள் ஏதுமின்றிக் குறுகிய
நிலப்பரப்பில் வைத்து இராட்சத
எறிகணைகளை மழையாய்ப் பொழிந்து
வெறித்தனம் ஆடிய வஞ்சக நரிகளே!

உலகம் தீர்ப்பு வழங்க முழிக்கிறது
நன்நெறி காட்டிய புத்தனே! நீயும்
கண் மூடித் தூக்கமா? இல்லை
உனக்கும் இன்னும் இரண்டு வருட
கால அவகாசம் வேண்டுமா?
செல்விருந்தோம்பி வருவிருந்து
பார்த்திருந்த உயர் பண்பாடு
கொண்ட இனமடா நாங்கள்

பாதுகாப்புத் தருகிறோம் வாருங்கள்
எனப் பக்குவமாய் அழைத்து விட்டு
நம்பி வந்தவரை இரத்தச் சகதிக்குள்
தள்ளி அமுக்கிக் கொன்றோரே!

தமிழர் தரப்பினரின் ஆயுதங்கள்
மௌனிக்கப்பட்ட பின்பும் கொடுPர
எறிகணைகளால் எமது மக்களைக்
திட்டமிட்டுக் கொன்றது இனப்படுகொலையே!

விருந்துக்கு வாவென அழைத்து விட்டு
நஞ்சைக் கலந்து நச்சு வெடி மருந்து
நிரப்பிய குண்டுகளால் மறைந்திருந்து
எறிந்து கொடுPரமாய்க் கொன்ற நரசிம்மங்களே!
தீர்ப்புகள் எட்டும் வரை தட்டுவோம் உலகின் கதவை!

பன்மொழி ஆற்றல் படைத்த இளையோரே! தோள்கள்
புடைக்க எழுக! உன்மொழித் திறத்தால் உன்னினம்
பட்ட வலி தீர்க்க புவிக்கோள் நடுங்க நிமிர்ந்தெழுக!
உலகின் குருட்டுக் கண்களுக்கும் ஓட்டைச் செவிகளுக்கும்
முதலில் சத்திர சிகிச்சை செய்க!

கவிஞர் மதி.