திசையெங்கும் செல்க! ஈதலொடு இசைபட வாழ்ந்து இவ்வுலகையே வெல்க! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

திசையெங்கும் செல்க! ஈதலொடு இசைபட வாழ்ந்து இவ்வுலகையே வெல்க!


புங்குடுதீவின் குலமகனே!

எழில் பொங்கிடும்  தமிழீழத்தின் புரட்சிப்
பாடகன் சாந்தன் இசை உலகிற்கு
உவந்தளித்த கோகுலனே வாழ்க!

மங்காத புகழோடு உன் தந்தையைப் போல்
எங்கும் எப்போதும் எங்களினத்தின் கொடுங்
கங்குல் கிழிக்கும் கதிரொளியின் வீச்சாய்
அகிலமெங்கும் ஓங்கு குரல் எடுத்து பாடு
எங்கள் கோகிலமே!

எட்டடி பாய்ந்தாலும் எட்டிப் புகழ்
வானம் தொட்டான் உன் தந்தை!
பதினாறடி பாய்ந்து தந்தையை விஞ்சினாலும்
என்றும் கொள்ளாதே நீ அகந்தை!

தந்தை தந்ததை சிந்தையில் ஏற்றி
தரணியெங்கும் எடுத்துக் கூவு! நம்
முந்தைத் தமிழரின் பெருமை எல்லாம்
பாடட்டும் உன் விந்தை மிகுந்த நாவு!

ஈழத்தின் இளைய கலை அரசே!
பாட்டாலே தீட்டுக விடுதலை முழக்கம்!
எதிரிக்கு பிடிக்கும் இதைக் கேட்டுக் கலக்கம்!
அண்ணனவன் தானே ஈழத்துக் கலங்கரை விளக்கமாம்!
விளக்கதின் ஒளியேந்திப் பாடுவாய் நீ வழக்கமாய்!
ஓட்டைச் செவிகளிலும் உட்புகுந்து துலங்கப்
பாட்டைப்பாடு! அதில் எங்கள் நாட்டைப்பாடு!
கடலும் பெருக்கெடுத்து ஓடி வரும்
உன் கணீரென்ற குரல் கேட்டால்!
கானகத்து மரங்களும் முறுக்கெடுத்து
அணி வகுக்கும் உன் வீரதீரப் பாட்டால்!
காலத்தால் அழியாதது ஞாலம்
புகழும் உன் அப்பன் பாட்டு! காலமும்
மயங்க வேண்டும் கோகுலனின் பாட்டுக் கேட்டு!



மானமா மறவர் துயில் எழுந்து
செவி மடுப்பார்! வானமா தேவர்களும்
கீழிறங்கி வந்து வாழ்த்துச் சொல்லிப்
பூக்கொடுப்பார்!

என்றும் கிழியாது என் பாட்டென்;று சொன்ன
அன்றந்தத் தமிழன்னை அவ்வையின் மொழி போல
என்றும் அழியாது என் பாட்டென்று
புகழ்க்கொடி நாட்டு! இன்றில்லா விட்டாலும்
நாளை ஒரு நாள் புலிக்கொடி விண்Nறுமென
உன் பாட்டால் உணர்வூட்டு!

இளைய கோகிலமே பாடிப்பறந்து வா
எம் இனத்தின் துயரெல்லாம் பறந்தோடப் பாட வா!
களை மண்டிக் கிடக்கிறது ஈழவயலெங்கும்!
உன் வீரப்பாட்டால் செல்லும் இடமெல்லாம்
களைக்கொட்டு எடுத்துக் கொடுப்பாய்
இனமானத்தமிழரின் கையெங்கும்!

வண்டமிழ் ஈழம் மலர உன் குரலால் தொண்டாற்று!
பண்டு போல் தமிழினம் மீண்டும் நிமிர்ந்து நிற்க
தண்டமிழ்க்குரலெடுத்து காயம் பட்ட உள்ளங்களை நீ ஆற்று!

புலிக்குட்டிக்குப் பாய்ச்சலும் மீன் குஞ்சுக்கு
நீச்சலும் கற்றுக் கொடுத்து வருவதில்லை
இரத்தத்தில் ஊறிச் சித்தத்தில் ஏறி தன்
சுற்றத்து நடுவே இம் மன்றத்து நிற்கக் காண்கிறோம்

எங்கே உன் குரலிலே பாய்ச்சலையும்
உணர்விலே விடுதலையின் நீச்சலையும்
எதிரே வரவைப்பாய்! இங்கேயிந்த அரங்கை
ஒரு முறை அதிர வைப்பாய்!

அந்தக் கோகுலன் குழலிசை பொழிந்தால்
பால் சொரியாத சுரபிகளும் உண்டோ? அது போல
இந்தக் கோகுலனின் குரலிசைக்கு மயங்காத
ரசிகர்களும் இப்புவியில் உண்டோ?

சாந்தனை இழந்ததென்று யார் சொன்னார்?
ஏகாந்தனாய் குரல் வேந்தனாய் கண் முன்னே
அவன் முகம் காட்டுகின்ற இளைய மாந்தனே! நீடு வாழ்க!

அகம் குளிரப் புதுயுகம் பிறக்கும்!
அனல் பறக்க அண்ணனவன் வருவான்
நம் அனைவர் வாழ்வும் அன்று சிறக்கும்

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் வந்துன்
பாட்டுக்கும் பண் சுமந்து தருவான்! திக்கெட்டும்
பறக்கட்டும் எங்கள் இசைப்பறவைகள்! அதைக்
கேட்டுத் திறக்கட்டும் இரகர்களின் மனக்கதவுகள்!
திசை எங்கும் செல்க! ஈதலொடு இசைபட வாழ்ந்து
இவ்வுலகையே வெல்க வெல்கவென வாழ்த்துகிறேன்
நலமுடன் பலம் பெற்று வாழ்க வாழ்கவே!

      கவிஞர் மதி