புறனானூற்று வீரர் தம் ஈகம்…! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

புறனானூற்று வீரர் தம் ஈகம்…!


ஆறடி மண் கூட வேண்டாமென
அறவழி போரிட்ட அணி தன்னிலே
வீறுடன் இணைந்திட்ட வீரர்களே
மார் தட்டி கூவிட்ட மா தீரர்களே

தியாகத்தீ தனை வளர்த்தீர்கள்
ஆகுதி ஆகி கலந்தீர்கள்
உம் ஆகுதி தீயில் குளிர்காய்ந்த
அற்ப மானிடராய் நாமானோம்

தம்மை உருக்கி ஒளிதந்தீர்
தமிழுக்கே வழிகாட்டி உயர்ந்து நின்றீர்
நிம்மதியாய் உறங்குங்கள் தாய்மண் மீது
நிலையான உங்கள் கனவுகள் உறங்காது

அன்று கல்லறைகள் மீது முகம் புதைத்து
கண்ணீர் மழையால் கரைத்து நின்றோம்
காவிய சிறகுகள் அசைத்து அந்த-கல்லறை
கதவுகள் திறக்க வைத்தோம்

அந்த கல்லறை கோயில்கள் இன்று இல்லை
வெந்த நெஞ்செலாம் வேதனைக்கு பஞ்சம் இல்லை
ஆயினும் ஒளிதீபம் ஏற்றி வைத்து சுடர்தனில்
திருமுகம் காண என்றே காத்துகிடக்குது எங்கள் மனம்

கயவர் துரோகங்களால் கலைந்துபோன கல்லறைகள்
காணாமல் போனாலும் மண்ணுக்குள் வித்தான மறவர்
கனவுகள் மறையாது காலம் வஞ்சித்தாலும்
கறங்கென தமிழன் மன விடுதலை எண்ணம் சுழன்றடிக்கும்

இலட்சியக்கனவுகளுக்கான பாதைகளில் மாற்றம்காண்போம்
கனவுகள் மெய்ப்பட கைகள் கோர்த்து நிற்போம்
கம்பிவேலி பின்னாலே காத்துநிற்கும் உறவுகள் சிறகடிக்க
சுதந்திர வானமாய் நாம் யாவரும் மாறுவோம்



கார்த்திகையே தியாகசீலர் தமக்காய் பூத்தாயோ
புகழ் கொண்ட தலைவன் பிறப்பையெல்லாம் புவிமீது
எழிச்சியுடன் உரைக்க மழையாய் சொரிந்தாயோ
உன்னுடன் கலந்தே காவியர் தனை போற்றி நிற்போம்…

சாவிலும் சரித்திரம் படைத்த
சந்ததிக்கும் வீரகாவியம் வரைந்த
தேசியப்புதல்வர் நினைவு சுமந்த
வீரியம் மிக்க கவிகளை
படைத்து நின்ற கவிகாள்பணி தனுக்கு
பாராட்டுக்களும் நன்றியும் தெரிவித்து

வரலாறு என் வழிகாட்டி இயற்கையே நண்பன்
என அணி நடத்தி பணிமுடித்த தானைதலைவன்
அவர் வழி தொடர்ந்த மாவீரர் நினைவுசுமந்த
அஞ்சலி கவிப்படையல் தனை தன் தீரமிகுதொகுப்பால்
பாருக்கு படைத்தளித்த கதிரவன் உலாவுக்கு நன்றிகூறிவிடைபெறுகிறோம்.

– கவி-பவானி மூர்த்தி –