ஈழம்!…. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

ஈழம்!….வங்கக்கடல் சூழ்ந்திருக்க
சங்ககால மலர்கள் சோலையாக்க
சேலையணிந்த மாந்தரின்
கூந்தல் வாசம் வீச
வானுயர் கோபுரத்தின் ஓலி ஒளியும்
வானவரை அழைத்து நிற்க…
சேவல் கூவி துயிலெழுப்ப….
காலையில் பாடும்
புள்ளினத்தின் இனிய சந்தத்தோடு
சுள்ளெனப்படும் சூரியனின் பிரகாசமும்
மாலையில் மயக்கும்
மஞ்சள் பூசும் வானமுமாய்
பரவசத்தில் ஆழ்த்துமே எங்கள் ஈழம்!…
நாவினிக்கும் செந்தமிழும்
நாவூறும் பனங்கட்டியும்
மெல்லிய பனிச் சாரலுடன்
மிருதுவாய் மேனிதடவி
மெதுவாகத் தூங்க வைக்கும் கடற்காற்றும்
கூடி நிற்கும் தென்னந்தோப்பும்
கூவி திரியும் குயில் ஓசையும்
காற்றில் அசையும் மூங்கில்களும்
ஜோடியாக பேசும் தோப்புக்கிளிகளும்.
ஈழத்தை சோலையாக்கும்!…
புல்தரையில் பட்டுவரும் பனிச்சாரல்
கொஞ்சி பேசும் கடல் அலைகள்
சேலை கட்டி அசைந்தாடும் மேகக்கூட்டம்
ஓவியனின் தூரிகையால் வரைந்தது போல்
பச்சை வண்ண வயல் வெளிகள்…
வானம் தொடும் திராட்சை செடியிடையே….
நாணத்தோடு எட்டிப் பார்க்கும் வெற்றிலையும்…
எங்கள் ஈழத்தின் புகழ் பாடும்!…
ஈழமென்றால் தன்னம்பிக்கை,
ஈழமென்றால் தைரியம்
ஈழமென்றால் ஒன்றுபடல்..
ஈழமென்றால் விருந்தோம்பல்
ஈழமென்றால் விட்டுக் கொடுத்தல்
என்றெல்லாம்
சொல்லிடத்தான் ஆசை..
புகழ் பேசும் மனதினுள்ளே
இகழாய் எழுந்து நிற்கும்
வன்முறையும், வதைகளும்
மறைவாய் எட்டிப் பார்த்து
சொர்க்கமான என் பூமியை
சோகமாய் மாற்றியதேன்?
எட்டப்பர்கள் எட்டி நின்றால்
ஈழமென்றும் சொர்க்கமாகும்!….