கம்பெரலியவில் மயங்கியிராதீர்கள்; பேரம்பேசும் கடைசி சந்தர்ப்பத்தை அரசியல் கைதிகளிற்காக பாவியுங்கள்: கூட்டமைப்பிற்கு இடித்துரைக்கும் சிவசக்தி ஆனந்தன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 28, 2019

கம்பெரலியவில் மயங்கியிராதீர்கள்; பேரம்பேசும் கடைசி சந்தர்ப்பத்தை அரசியல் கைதிகளிற்காக பாவியுங்கள்: கூட்டமைப்பிற்கு இடித்துரைக்கும் சிவசக்தி ஆனந்தன்!

தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் தமிழ்த் தரப்புக்கு பேரம்பேசும்
இறுதிச் சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பே உள்ளது. அதனை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வவுனியாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

போர் நிறைவுக்கு வந்து ஒரு தசாப்தத்தை தொடவுள்ள நிலையில் இன்னமும்
இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது இவர்களின்
விடுதலையும் பிரதான பேசுபொருளாக இருந்தது. ஆனால் ஆட்சி மாறிய பின்னர்
அந்த விடயத்தினை அழுத்தமாக பிடிப்பதற்கு தமிழ்த் தரப்புக்கள் தவறியே
வந்துள்ளன.

ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திற்குமான இறுதி வாக்கெடுப்பிற்கு சற்று
முன்னர் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும், கூட்டமைப்புக்கும்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின்
விடுதலையும் பத்தோடு பதினொன்றாக கூறப்படுமே தவிர எதுவுமே செயல்
வடிவம் பெறுவதில்லை. வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு வருடமும்
பாதுகாப்பு செலவீனத்திற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாண்டும் 398.7 பில்லியன் ரூபா ஒதுக்கபட்டும் ஆதரித்து வாக்களிக்கும்
செயற்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிடவில்லை.



மேலும் அதன் பின்னர் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் இல்லை.

இதுவொருபுறமிருக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து
வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக்கு அதிகமான காலமாக
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வழக்குகள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதில்லை. வழக்குகளுக்கான தவணைக்காலம் நீண்ட இடைவெளியைக் கொண்டுள்ளது. இவர்களுக்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றமும் தற்போது செயற்பாட்டில் இல்லை. சிலருக்கான குற்றஒப்புதல் வாக்கு மூலங்கள் நீதிமன்றத்தால் நிரகாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் அடுத்து எவ்விதமான
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.



இதனைவிடவும், அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தாமாகவே போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது தமிழ் தலைமைகளே நேரடியாக சென்று வாக்குறுதிகளை வழங்கி போராட்டங்களை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளன. அதற்குப் பின்னரான காலத்தில் கண்துடைப்புக்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றதே தவிர செயற்பாட்டு ரீதியாக எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

மக்களின் இயல்பான எழுச்சிப் போராட்டங்களும் மழுங்கடிக்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பகளும் வீணடிக்கப்பட்டு தற்போது தமிழ் அரசியல் கைதிகள் விடயம் கிடப்பிலேயே உள்ளது. இவ்வாறான நிலையில் புதிய பயங்கரவாதச் சட்டம் அமுலாக்குவதற்குரிய நடவடிக்கைகளை
அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதுபற்றி கூட்டமைப்பில் உள்ள சட்டம்
தெளிந்துணர்ந்தவர்கள் இதுவரையில் வாய்திறக்காதுள்ளனர். ஆனால்
தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான
கே.வி.தவராஜா புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அபாயத்தினையும்
பயங்கரத்தினையும் எடுத்துக்கூறி வருவதுடன், அச்சட்டம் அமுலானால் சிறையில்
இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்பதையும்
தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

இவ்வாறான பின்னணிகளை வைத்துப் பார்க்கிக்கின்றபோது, தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலையானது தனியே தேர்தல் கால கோசமா? அந்த உறவுகளின்
வாக்குகள் பெறப்பட்ட பின்னர் தற்போது அவ்விடயம் கைவிடப்பட்டுவிட்டதா?
போன்ற சந்தேகங்களையே எழுப்புகின்றது.



கடந்த காலத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டங்கள், ஒக்டோபரில் நடைபெற்ற
அரசியல் குழப்பம் பின்னர் அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்தல் என எந்தவொரு
கட்டத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் உட்பட எந்தவொரு
விடயத்தினையும் முன் நிபந்தனையாக வைத்து பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எல்லாம் கைவிட்டு தென்னிலங்கையிடம் சரணாகதி அடைந்துள்ள தமிழ்த் தரப்பினருக்கு தற்போதைய சூழலில் ஒரு இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் எப்ரல் ஐந்தாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களின் இறுதி
வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த
வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் வாக்குகள் அதீத செல்வாக்கினை செலுத்துவதாக
உள்ளன. எந்தவொரு நிபந்தனையுமின்றி கம்பெரலிய திட்டம் கிடைத்து விட்டது
என்ற மாயைக்குள் சிக்கி எழுந்தமானமாக ஆதரவளிக்காது, தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலைக்கு உறுதியான பதிலளிக்க வேண்டும் என்ற விடயத்தினை
முன்வைத்து பேரம்பேச வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விட்டால் எதிர்காலத்தில் கூட்டமைப்பினது
எந்த ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படாது. அதன் பின்னர்
கூட்டமைப்பால் அரசாங்கத்தினை கிடுக்குப்பிடி பிடிக்க முடியாது என்பதே
யதார்த்தமாகும். ஆகவே வரவு செலவுத்திட்டம் முதல் ஜெனீவா வரை
அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இருபது முப்பது
வருடங்கள் இளமையை, உறவுகளை தொலைத்து சிறைகளில் வாடுகின்றவர்களின்
விடுதலையை இதயசுத்தியுடன் வலியுறுத்தி மனிதபிமானத்தின் பால் தீர்க்கமான
முடிவெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.



இந்தச்சந்தர்ப்பத்தினையும் கைவிட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் மக்கள்
புரட்சி வெடிக்கும் என்றும், பயங்கர பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்
என்றும் எச்சரிக்கை விடுவதாலும் சூளுரைப்பதாலும் எவ்விதமான நன்மைகளும்
கிடைக்கப் போவதில்லை. அத்தோடு மீண்டும் முன்னைநாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று கூறிக்கொண்டு ஜக்கிய நாடுகள்
மனித உரிமைகள் பேரவையில் மூன்று தடவை கால நீடிப்பிற்கு ஆதரவை வழங்கி
விட்டு, போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களோடு சம்பந்தப்பட்டவர்களை
பாதுகாத்து வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து விடக்கூடாது
என்று கூறுவது கேலிக்கூத்தான விடயமாகும். இவை அனைத்துமே தேர்தலுக்கான
முன்னுரைகளாகவே அமையும் என்பதை மக்கள் நன்கே அறிந்துள்ளனர் என்றார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட செய்தியாளர் ஒருவர் வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பாக கேள்வியெழுப்பிய போது,

வில்பத்தில் மட்டுமல்ல வன்னி நிலப்பரப்பிலும் பெருந்தொகையான காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சியின் போது இந்த காடுகள் அதிகமாக அழிக்கபட்டுள்ளது. இலங்கையின் இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும். போரால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களிற்கு செல்லும்போது அவை பெரும் காடுகளாக காட்சியளிக்கின்றன. எனவே புதிய காடுகள் அழிக்கப்படுவது நிறுத்தபட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களை துப்புரவு செய்வதற்கு தடை ஏற்படுத்தகூடாது என்றார்.

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி வளைவு உடைக்கப்பட்டதன் பின் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக கேள்வியெழுப்பிய போது,

திருக்கேதீஸ்வர ஆலய விடயம் தொடர்பாக இரண்டு தரப்புடனும் பேசியிருக்கிறேன்.  முன்னால் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சனையை திசைதிருப்புவதற்காக இந்துக்களிற்கும், கத்தோலிக்கர்களிற்கும் இடையில் முரண்பாடுகளை நாங்கள் வளர்க முடியாது. இரண்டு மதத்தவர்களும் நீண்டகாலமாக அங்கு வசித்து வருகின்றார்கள். எனவே ஒற்றுமையை பேணி இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும். சில அரசியல் பின்புலங்களோடு இந்த குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றனர். அதற்கு நாம் துணைபோக முடியாது என்றார்.