மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி வளைவு உடைப்பு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்றை திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினர் நேற்று வெளியிட்டுள்ளனர். ஆயர் வெளியிட்ட அறிக்கையில், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் உள்ளன என்ற விடயத்தை திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
லூர்துமாதா ஆலயத்திற்கு முன்பாக அலங்கார வளைவு அமைக்கப்பட்டதாக கத்தோலிக்கர்கள் குறிப்பிட்டு வந்த நிலையில், அலங்கார வளைவிற்கு முன்பாகவே லூர்துமாதா ஆலயம் அமைக்கப்பட்டது என்ற விடயத்தையும் வெளிச்சமிட்டுள்ளனர்.
திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் –
“அதிவணக்கத்துக்குரிய மன்னார் மாவட்ட ஆயருக்கு, தங்களின் அறிக்கை தொடர்பாக சில விடயப்பரப்புக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவானது கடந்த நான்கு வருடங்களாக அவ்விடத்திலேயே இருந்தது.
இது லூர்து மாதா ஆலயம் திறக்கப்படுவதற்கு முன்னமே அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த வளைவு, லூர்துமாதா ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டது என்று தெரிவிப்பது உண்மைக்குப் புறம்பானதாக தகவலே.
குறித்த வளைவு மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. லூர்து மாதா ஆலயத்திற்கு முன்பாக வளைவு அமைக்கப்படவில்லை என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம்.
ஆலய வளைவு பதாதைகள் பழுதடைந்த நிலையிலும், கம்பிகள் துருப்பிடித்து இருந்த நிலையிலும் அவற்றை மாற்ற வேண்டி இருந்ததால், அதே இடத்தில் அதே அளவிலான வளைவு ஒன்றினை அமைக்க முற்பட்டபோது, அங்கு குழுமிய கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த சிலர் இந்த வளைவை இவ்விடத்தில் அமைக்க விடமாட்டோம் என்று தெரிவித்தனர். இதை அறிந்து அங்கு வந்த செ.இராமகிருஷ்ணன், ஏ.ஐ.தயானந்தராஜாவுடன் அந்த இடத்தில் நின்ற பங்குத்தந்தை கலந்துரையாடியபோது, “நான் இங்கு வந்து சில காலமே ஆகிறது. இது பற்றி நான் குருமுதல்வர் விக்டர் சோசை அடிகளார் கதைக்கிறேன்“ என்று தெரிவித்தார்.
தவிர வளைவு அமைப்பது தொடர்பாக, எவ்வித இணக்கப்பாடும் பற்றிப் பேசப்படவில்லை. அத்துடன் அவ்விடத்தில் வளைவு அமைக்கும் பொழுது ஏ.பி.சி கலவைத்தூள் போடப்பட்டதே தவிர, கொங்கிறீட் கலவை எதுவும் போடப்படவில்லை.
அத்தோடு சம்பவ இடத்தில் கத்தோலிக்க குருக்கள் யாரும் பிரசன்னமாக இருக்கவில்லை என்பதும் பிழையான செய்தியே. அது தொடர்பாக ஏற்கனவே ஒளிப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை அடிகளாரின் அறிக்கையிலும் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்ததை நாம் சுட்டிக் காட்டி ஏற்கனவே அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தோம். எனவே தொடர்ச்சியாக உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை தங்களது கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்“ என்றுள்ளது.