காந்தள் கண்மலர்ந்து
நெஞ்சுக்குழிகளை நிரப்பியபடி
சொந்த மண்ணின்
வாழ்வுரிமையின் வாசலை தேடியபடி
வரலாற்றின் சக்கரத்தை
பின் நகர்த்தியபடி
என் பிடரியை அறைகிறது.
அறத்தின் ஆன்மா!!
உனக்காகத்தானே
எனை தந்தேன்
உன் புன்னகைக்காகத்தானே
புதைகுழியில் வீழ்ந்தேன்
எனக்காக என்ன செய்கிறாய்
புரிகிறது……
கையிலே நெய்விளக்கெடுத்து
விழியிலே நீரைச்சுமந்து
கல்லறை அருகில்
கருகிய மேகங்களாய்
கரைகிறது
வானம்
உனது அழுகையும்
ஆத்திரமும்
ஆதங்கமும்
மண்ணை துளைத்தபடியே
விதைகுழியுக்குள்
ஒவ்வொன்றாய்
வீழ்ந்து
ஆத்மாவை
தொடுகிறது.
உன் கண்ணீரின்
காயத்தில்
என் கனவு காயப்பட்டு
துடிப்பதை
நின் இதயத்துடிப்பின்
உணர்வுகள்
ஆழ் குழியின்
அடிவரை
இடித்துரைத்து
போவதை
புரிய முடிகிறது.
பூமியின் மேற்பரப்பில்
விடுதலை இராகம்
இசைத்த உதடுகளுக்கு
முத்தங்களால்
வாழ்த்துப்பா பாடிய
வாய்களில்
புறம் தள்ளிய
அசுத்த காற்றின்
நாற்றம்
அழகிய பூவின்
வாசனையை
அழிக்க நினைப்பதை
பூமியின் கீழ்ப்பரப்பு
ஆழ் மனதுக்கு
அனுப்பிவிடுகிறது.
ஆனாலும்
உயரிய இருப்பிற்காய்
உறுதியாகி நெருப்பாய்
நில்!!
பிடரியை கீழே வீழ்த்தாதே
அடங்காத தாகத்தில்
பொங்கிய அலையாய்
புறப்படு!!
உன் ஆன்மபலமாய்
நான் வருவேன்.
-தூயவன்