கார்கால மழைமேகம் மண்ணிறங்கும் வேளையிலே
கார்த்திகையில் பூத்த காந்தள்மலர்ச் செண்டுகளே
கைதொழுது உங்கள்முன் நெய்த்தீபம் ஏற்றி
கண்வழிந்து நிற்கின்றோம் கனவுகளைச்சுமந்து.
பரந்தஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்
ஒன்றாகித்தமிழரென உங்களுக்கு உரைக்கின்றோம்
இருந்தநிலமெல்லாம் இழுபறியாய் கிடந்தாலும்
ஈழம்எனும் உணர்வில் ஒன்றித்து நிற்கின்றோம்.
கொத்துக்கொத்தாக நீங்கள் கொடுத்தஉயிரெல்லாம்
வித்தாகமண்ணுள்ளே விளைவதற்காய் கிடக்கிறது
முத்தான சொந்தங்களே எமக்கு முகவரிதந்தோரே
எக்காலம்ஆனாலும் எமக்குள்ளே வாழ்ந்திருப்பீர்.
கண்ணுறக்கம்விட்டுக் களமாடி வென்றோரே
செந்நீரால்தாயகத்தை சீராட்டிச் சென்றோரே
பெண்ணென்ற ஆணென்றபேதம் தகர்த்தோரே
பிள்ளைகளாய் வந்துதித்து பெருமைதந்தீரே.
எங்களுக்குத் தொல்லை தந்ததோர் இனி
இல்லையென உரைத்தோரே இளவல்களே
தங்கக்கடையல்களே தமிழினத்துமுத்துக்களே
எங்கும்விடியலுக்காய் ஒலிக்கிறது எமதுகுரல்.
வண்ணமுறமண்ணில் வாழ்ந்தவர்கள் நாங்கள்
வரலாற்றில்எங்களுக்கு வலுவான இடமுண்டு
திண்ணமுற்றுநிற்கின்றோம் தீந்தமிழர் தேச
திசைகள் விடிவுபெறத் தேன்மதுரத் தமிழாளும்.
தோற்றவர்கள் என்றுநிதம் தூற்றுவொர்ஒருநாள்
தோள்தருவார் ஒருகாலம் துணைநிற்பார் உங்களொடு.
போற்றுவொர்போற்றட்டும் பொழுதுவிடியட்டும்
பூக்கும்தமிழீழப் புன்னகையாய் புலரும்எம்வாசல்.
ஆதிலட்சுமி சிவகுமார்