இசைக்கும் கலைக்கும் ஆரம்
சூட்டுமிடம் மூன்றாம் வட்டாரம்
அசைக்கும் காற்றுக்கு ஓங்கிய
பெருங்காட்டு மரங்கள் தலையசைக்கும்
தந்தையுடன் தனயனவன் பாத நீழலிலும் எம்
முந்யைர் வளர்த்த குடை விரிக்கும்
பெருமரங்களின் நிழலிலும் வந்தமர்வார்
விந்தையுடன் தமை மறப்பார்!
விசை கொண்டு சோளகம் அடித்தால்
வெள்ளலைக் கரம் தட்டி சோவென்று
கடலே எழுந்து இசை பாடும்
அந்தப் பாடலை ரசிக்க மனம்
தினம் கடற்கரை நாடும்
கடலலை மீது தோணிகள்
தாளம் போடும் மனம்
இனம் புரியா இன்பத்தில் ஆடும்!
நுகைப்பதும் வற்றுவதும் போவதும்
வருவதுமாக அப்பப்பா இயற்கையின்
அழகோ தனியழகு! இந்த ஆடி மாதத்
திருக்கோலம் காண ஓடி வாரும்
மூன்றாம் வட்டாரக் கடற்கரையோரம்
வட்டாரங்களுள் மூன்றைப் போல
பன்னிரெண்டு மாதங்களுள் இந்த
ஒரு மாதம் மட்டும் அதிபிரமாதம்
கடலம்மா நீ வளர்த்தது
இந்த உடலம்மா! உடலை விட்டு
உயிர் பிரிந்தால் நீறாகி உனைச் சேருமம்மா!
முத்தமிழ் சுரக்கும் இங்கே
முப்பாலும் பொழியும் இங்கே
வித்தகர்கள் பிறந்ததிங்கே
அப்பால் நீ ஓடுவதெங்கே?
மூவுலகு தேடிச் சென்றாலும் மூன்றாம்
வட்டாரம் போல் வருமா சொல்?
சங்கத் தமிழ் இலக்கியமா
மூன்றாம் வட்டாரம் செல்!
சங்கார்த்த கேணி பார்த்ததுண்டா
மூன்றாம் வட்டாரம் செல்!
நலம் தந்து நல்வாழ்வு தரும்
மனோன்மணியாளும் வளமான
இறங்கு துறையோடு மணிபல்லவத்
தீவுக்கும், நெடுந்தீவுக்கும் செல்ல அணி வகுத்து
நிற்கும் படகுகள் கொண்ட குறிகாட்டுவான்
தப்பாமல் வருடம் தோறும்
உப்பு விளைந்திடும் நடுவுத்துருத்தி
வீரம்புளியடி, ஓடைக்கடல் சோரம்
போகா மக்கள் வாழும் திடல்
வாடையிலும் கோடையிலும்
வாழ்வளிக்கும் எங்கள் கடல்
வட்டாரத்தில் பெரியது மூன்று தான்
வலம் வந்து வணங்குவதும் மூன்று
முறை தான்! பட்டாம் பூச்சிகள் போல்
பலரையும் ஈர்ப்பது வட்டாரம் மூன்று தான்
சங்கொக்க வெண் குருத்தீன்று என ஒளவை
சொன்னது போல் எங்கும் வான் வரை வளர்ந்து
நிற்கும் பனைகளுண்டு; தேன் சுவை இளநீர்க் குலை சுமந்து
நிற்கும் தென்னைகளுண்டு; ஆலைகளுண்டு நல்ல
சோலைகளுண்டு; பச்சைப் பசேலென்ற நெல் வயல்களுண்டு
தோட்டம் துரவு ஆட்டம் பாட்டம் என அனைத்தும் இங்குண்டு!
அருள் பொங்கும் மாரியம்மன் கிழக்கிலுண்டு
காவல் தந்து கருணை பொழியும் பேச்சி
அம்மன் மேற்கிலுண்டு; பெத்தப்பு சாமியும்
ஐயனாரும், வைரவரும் மெத்தக் காவல் புரிவதுண்டு
வானுயர்ந்த முக்கோபுரங்கள் கொண்ட ஆலயங்களால்
தானுயர்ந்து நிற்கிறது மூன்றாம் வட்டாரம்
நூற்றாண்டை நெருங்கும் சுப்பிரமணியன்
மகளிர் பாடசாலையும் அமெரிக்கன் தமிழ்க்
கலவன் பாடசாலை இரண்டுடன் பழமை
வாய்ந்த பராசக்தியும் வளம் நிறைந்த
அறிவினைச் சொரிந்து நிற்க, பலம் வாய்ந்து
திகழும் வட்டாரமே! மூன்றாம் பிறை போல்
வந்து தேயாத முழுநிலவாய் என்றும் ஒளிர்க!
தந்தையும் மகனும் அருகிருந்து
விந்தைகள் புரியும் பதியில்
ஐந்து முகத்தானும் ஆறுமுகத்தானும்
வந்தமர்ந்த பதியில் எந்த முகத்தானும்
வந்து சேறு பூச முடியாது வெந்த புண்ணிலே
பாய்ந்த வேல் எடுத்து சொந்த மண்ணிலே
செங்கோல் ஆட்சி நடத்து
பன்னிரு குறிச்சிகள் கொண்ட என்னருமைத்
தாயாம் புங்கையூரை கண்ணெனப் போற்றிக்
காப்போம் மூன்றாவது கண் போல் விளங்கும்
மூன்றாம் வட்டாரத்தில் தான் தோன்றாத் துணை போல்
இன்று வரை ஒளி வீசுகிறது சர்வோதயம்.
வேரும் விழுதும் போல் சீரும் சிறப்புமாய்
பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்த வேளை
போரும் பூசலும் பெரும் புயலென வந்து சூழ
ஆரும் அறியாப் பொழுதொன்றில்
தேரோடிய தலங்களை நீராடிய குளங்களை
மாடு, மனை, காணி, பூமியென எல்லாம் விட்டுப்
பெயர்ந்தனர் முதுமைகளும் உடைமைகளும்
அநாதரவாக, ஓரிருபது வருடங்கள் துயரக் கடலுக்குள்…
கலங்கரை விளக்குத் தெரிகிறது கரங்களை
ஒன்று சேர்த்துக் கரையேறுங்கள் நடுநாயகமாய்
விளங்கும் மூன்றாம் வட்டாரம் நோக்கி, அங்கிருந்து
ஏனைய வட்டாரங்களுக்கும் கை கொடுப்போம்
பக்தர்கள் நிறைந்த மண் பழம் சித்தர்கள்
தவம் புரிந்த மண்! வித்துவான்கள்
வாழ்ந்த மண் வித்தைகள் விளையும் மண்
வடமொழிப் பாடசாலை கண்ட மண்! பலமொழி பேசும்
பாரெங்கும் வாழும் இம்மண்ணின் பிள்ளைகள் எமதிரு கண்!
இந்த இடம் தான் புங்குடுதீவின் மூன்றாம் கண்!
கவிஞர், த. மதி.