கல்லறைகள்
கண்ணீர் விடுவதற்கல்ல
கருத்தரிப்பதற்கே!
ஒரு
இருளின் யுகத்தை
எரிப்பதற்க்காகத் தான்
அவன்
சூரியனாக்கி போனான்
போராளி நடந்த
சுவடுகளை
தொட்டுப் பாருங்கள்
சுள்ளென்று சுடும்
அவன்
விடுதலையின் தாகங்கள் !
அவன்
உயிரின் ஆன்மா
எதை நினைத்து
உறங்கிப் போயிருக்கும்
தனது
தோளில் தாங்கும்
சுதந்திர வேட்கையை
தனது சந்ததி
சுமக்கும் என்றுதானே….
அவன் வீரமரணத்தின்
அர்த்தத்தை
அசிங்கப்படுத்தாதீர்!
கண்ணீர் விடுவது
கன்னத்தில் கை வைப்பது
கோழையின் செயல்!
விழிகளை துடையுங்கள்
தெளிவான பாதையை
தேடுங்கள்
மீண்டும் மீண்டும்
இழப்புகள்
எதிரொலிக்கலாம்
இழப்புக்கள் இன்றி
எதுவுமேயில்லை
இழந்தவைகளில்
இருந்து தான்
அவன் எழுந்தான்!
எரிந்த குடில்
கருகிய வயல்
எரியுண்ட படிப்பகம்
வாழ்விழந்த பெண்
ஓடிய குருதி
அயலவரின் பிணம்
இழப்புகலிருந்து தான்
அவன் எழுந்தான்!
கண்ணீர் சிந்தி
கல்லறையை
களங்கப்படுத்தாதீர்கள்
விழிகளைத் துடையுங்கள்
விரைவாய்
அவன் வழி தொடருங்கள்
கல்லறைகள்
கண்ணீர் விடுவதற்கல்ல