தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்புக்கு பின்னர் முதல் முறையாக சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதி பேட்டியளித்துள்ளார்.
பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் 1990களின் இறுதியில் ஹொட்டல் சரவண பவனில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
அவரின் மனைவி ஜீவஜோதி, கணவரைக் காண சரவணபவனுக்கு வந்த போது அதன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
ஜீவஜோதியை அடைவதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது. ஜீவஜோதி இதுதொடர்பாகப் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2009-ல் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்த தண்டனையை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்பு குறித்து ஜீவஜோதி அளித்த பேட்டியில், தீர்ப்பு விவகாரம் தெரிந்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன்.
இதற்காக நீதிபதிகளுக்கு மட்டுமில்லாமல் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ராஜகோபால் என்னை கொடுமை செய்த போது ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து விபரங்களை சொன்னேன். அப்போது அவர் முதல்வராக இல்லை.
எனக்கு அவர் உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.
பின்னர் 2001ல் ஜெயலலிதா முதல்வர் ஆன பின்னர் அந்த வழக்கை பொலிசார் தீவிரமாக விசாரித்தனர், ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் அவரை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றிருப்பேன்.
சரியாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த பொலிசாருக்கு நன்றி.
சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும் நீதி வென்றது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.