பஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா ஷோரே (36), என்பவர் நேற்று காலை அவருடைய அலுவலகத்தில் வைத்து மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த சக அதிகாரிகள் தப்பி ஓட முயன்ற மர்ம நபரை சுற்றிவளைத்தனர். உடனே அந்த நபர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வைத்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் பல்விந்தர் சிங் என்பது தெரியவந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்விந்தர் சிங் கடையில் சோதனை மேற்கொண்டு, காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதாக கூறி நேஹா கடைக்கு சீல் வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பல்விந்தர், துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பல்விந்தர், நேற்று காலை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், துப்பாக்கி சூடு நடந்த சமயம் நேஹாவின் 6 வயது மகளும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.